இடுப்பைக் குறைக்க உணவைக்குறைப்பவரா? இதய நோய் வரலாம்!
குண்டு உடம்பு இளைத்து, கொடி இடையாக வேண்டுமென பட்டினி கிடப்பவரா? பாருங்கள் படியுங்கள்:

கலிபோர்னியா மற்றும் மின்சொனட்டா பல்கலைக்கழக உணவியல் அறிஞர்கள், டயட்டில் இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய 121 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரு பிரிவாகப் பிரித்தனர். அதில், ஒரு பிரிவினருக்கு, 1200 கலோரிகள் கிடைக்குமாறு மூன்று வாரங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு, 2000 கலோரிகள் கிடைக்குமாறு உணவு வழங்கப்பட்டது.
மூன்று வாரங்கள் முடிந்தபின், அவர்களின் உமிழ் நீர் சோதனை செய்யப்பட்டது. கலோரிகள் குறைந்த உணவை உண்ட குழுவினரின் உமிழ் நீரில், மன அழுத்தம் உருவாக்கும் “கார்டிசால்” எனும் ஹார்மோன் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால், உடலில் ஏற்படும் மாற்றங்களால், இதய நோய், இனிப்பு நோய்(டயபடீஸ்), புற்றுநோய் கட்டிகள் உருவாகலாமென எச்சரித்துள்ளனர்.
எடையைக் குறைக்க, டயட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம், மற்ற நோய்களைக் கொண்டு வராமலிருக்க வேண்டும். கவனம் தேவை.
இதற்கு எதிர்மறையான முடிவுகள், அமெரிக்க “டப்ட்ஸ்” பல்கலைக்கழக, மனித ஊட்டச்சத்து மைய ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது. கலோரிகள் நிறைந்த உணவை உண்போரை விட, கலோரிகள் குறைந்த உணவை உண்போருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது, இவர்களின் ஆறு மாத கால ஆராய்ச்சியின் அரிய கண்டுபிடிப்பாகும்.

No comments:
Post a Comment