இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 21 October, 2011

முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.

டிஸ்கி: இது கடந்த வருடம், எனது மும்பை பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவம். மீள் பதிவு. தேர்தல் பணி-செல்கிறேன்.


                            பத்து நாட்களுக்கு முன் பம்பாய் போனேன். என்னுடன் எனது மூத்த சகோதரரும் வந்திருந்தார். இளைய சகோதரரின் மகளுக்கு வளைகாப்பு. நாகர்கோவிலிலிருந்து வந்த ரயிலில் நெல்லையில் ஏறியதும், எடுத்துச் சென்ற உடமைகளை சீட்டிற்கு அடியில், அடுக்கி வைத்து நிமிர்ந்தால்,   எதிர்த்த  சீட்டில் பல்லுப்போன பாட்டியொன்று பாங்காய் அமர்ந்திருந்தாள். அவருக்கருகில் நாற்பதுகளில் ஒரு நளின சகோதாரி. அத்தனை நளினமாய், பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார். இருவரும் பேசுகையில் தெரிந்து  கொண்டோம், இவருக்கவர் உறவில்லையென்பதை.
                                  நெல்லையின் எல்லைகூட தாண்டவில்லை. எங்களுக்குப் பின்பக்க இருக்கையிலிருந்து சுடச்சுட காபி வந்தது. எடுத்து வந்து தந்தது பாட்டியின் மைந்தனாயிருக்க வேண்டும். அறுபதில் ஐந்தைத் தொலைத்திருந்தார் யோசனையுடன் வாங்கி அருந்திய பாட்டியிடம் சந்தோசமில்லை! இரண்டு மணிக்கொரு முறை, இன்முகத்துடன் ஏதேனும் ஒன்றை பாட்டியிடம் கொடுப்பதும், அதை பாட்டி பாதி மனதுடன் வாங்கி உண்பதுமாய்ப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், பாட்டி ஏதோ முனுமுனுப்பது மட்டும் காதில் விழுந்தது.
                           பிற்பகல் வந்தது. பாட்டிக்கு பாங்காய் உணவும் வந்தது. வந்து கொடுத்ததும் அவர்தான். இப்படியோர்  மகனைப் பெற்றெடுக்க, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தீர்? மெல்லக் கொக்கியிட்டது என் கேள்வி!
                                பாட்டியின் முகத்தில் பல்லாயிரம் பாவங்கள். இவரு எம்மருமகன். எம்மகா, அடுத்த பக்கமிருக்கா. அங்கிருந்துதான் எல்லாம் வருது. ஆனா! அவ வந்து, முகம் குடுத்து என்ட பேசமாட்டா. பணத்திமிர்  . . . . .  என்று இன்னும் பல. வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்திற்கு, வறண்டுவிட்டது என் நாக்கு. அத்தனையும் சோகம்.
                            அடுத்த நாளும் வந்தது. அத்தனை முறையும் உணவும் வந்தது. ஆனால், பாட்டியின் மகள் மட்டும் வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை. பாட்டியின் முனகலும் நிற்கவில்லை.
                              பாட்டி! பாசமில்லாமலா பாங்காய் உணவு வருது என்று சொன்ன  எங்கள்  வார்த்தைகள் எதுவும் எடுபடவில்லை. பாவம், பாசத்திற்கு ஏங்கும் பாட்டி.
                         என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், மகள் வந்து ஒரு முறையேனும் அந்தத் தாயிடம் பேசியிருக்கலாம். பேசாததால், மருமகனே, அத்தாய்க்கு மகனானான்.
                          பாட்டி இறங்குமிடத்திற்கு முந்திய ரயில் நிலையத்தில், அருகிலிருந்த அந்த நளின சகோதரி  இறங்கும்போது அவரை ஆசிர்வதித்து அனுப்பவும் அந்த பாட்டி மறக்கவில்லை.
                                எத்தனைதான் வீட்டில் மனக்குறைகள் இருந்தாலும், ரயிலில் ஏறும் முன், அதை மூட்டை கட்டியிருக்க வேண்டும். அத்தனைபேர்  மத்தியிலும், அதை காட்டியிருக்கக் கூடாது.
                                   எத்தனை நாள் சுமந்து பெற்றாளோ!  என்றென்றும் முதுமையைப் போற்றுவோம்.
                                   மும்பையில், ரயிலிலிருந்து இறங்கும்வரை, என் சோகம் மட்டும் மாறவில்லை. இன்றைக்கும் என் மனதில் பாட்டியின் முகம் மட்டும் அழியவில்லை.
Follow FOODNELLAI on Twitter

13 comments:

M.Mani said...

மகன் சுமக்க வேண்டிய சுமையை தான் சுமக்க வேண்டியுள்ளதே என்ற வேதனையாக இருக்கலாம் மகளுக்கு. ஆனால் இன்முகத்துடன் உபசரிக்கும் அந்த மருமகனுக்கு ஆண்டவன் அருள் நிச்சயம் கிட்டும்.

மா.மணி

hamaragana said...

அன்புடன் வணக்கம் தாய் என்றால் என்ன என்று அந்த ஆண் மகனுக்கு தெரிந்திருக்கிறது .. பெண்மையை மதிக்க போற்ற தெரிந்திருக்கிறது .நல்லவளூ ??கெட்டவளூ?? அவருடிய மனைவிஐ மதிக்க தெரிந்ததால் தானே மனைவின் தாயாருக்கு பணி செய்தார் ஆனால் அந்த மகள் தான் கடமையில் தவறி உள்ளாள்.. என்ன செய்வது இப்படியும் சில ஜென்மங்கள்..

RAJAMANICKAM said...

Touching news. Her son-in-law pallandu vala namum valthuvom. Vazha valamudan. we pray for her daughter.

ஆமினா said...

இப்படியும் சில ஜென்மங்கள் :-(

ம.தி.சுதா said...

தாயை மதிக்காதவனை மனிதப் பட்டியலுக்குள்ளேயே சேர்க்க முடியாது.. மிருகம் என்று அவற்றையும் கொச்சைப்படுத்தக் கூடாது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

Unknown said...

பெண்களின் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருவதை எல்லா இடங்களிலும் பரவலாக காணமுடிகிறது. நாம் எங்கே தவறுகிறோம் என்பதுதன் புரியவில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் கலிகாலம், அன்பு தணிந்து கொண்டிருக்கிறது...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

பாட்டிக்கும் மகளுக்கும் இடையே இருந்த கசப்பு, பாட்டி சொன்னமாதிரி பணத்திமிரா இருக்க சான்ஸே இல்லை, இவர் இங்கே புலம்புகிறார், அங்கே அவர் மகள் என்ன புலம்பி இருக்க கூடும்...??? இருந்தாலும் முதுமையை போற்றிய மருமகனை பாராட்டவேண்டும்!!!!!

அம்பாளடியாள் said...

தாயை மறந்த பிள்ளைகளைப் பற்றி பேசிப் பயன் இல்லை .தன் மாமியாரை தாய்போல் மதிக்கும் மருமகனைப்
போற்றவேண்டும் .அருமையான பகிர்வு .மிக்க நன்றி உங்களுக்கு என் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .....

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,
நலமா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

நிரூபன் said...

தம் சுக போகங்களுக்காக பெற்றோரை ஒதுக்கி வைக்கும் பிள்ளைகள், என்று தான் இவர்கள் திருந்துவார்களோ...

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

Unknown said...

அவருக்கருகில் நாற்பதுகளில் ஒரு நளின சகோதாரி. அத்தனை நளினமாய், பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார். ///

இந்த சம்பவத்தில் நளினத்திற்கு பெரிய ரோல் இல்லையென்றாலும் உங்களைப் போல் எனக்கும் நளினத்தை மறக்க இயலவில்லை.