இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 19 September, 2010

மாசு படுத்தும் மருத்துவமனைகள்.

      (மகத்தான மருத்துவ சேவை செய்யும் பல மருத்துவர்களுக்கல்ல,
             மனசாட்சியில்லா ஒரு சிலருக்கு மட்டுமே)
            நோய்கள் தீர மருத்துவமனை சென்ற காலம் மாறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல நோய்களை மனிதனுக்கு மருத்துவமனைகளே  வாரிவழங்கும் காலமிது. இன்று இருக்கும் பல வசதிகள் இல்லாதபோது கூட, இன்னல்கள் பல தீர்த்த மருத்துவர்கள் உண்டு. மருத்துவத்துறையில் மகா உன்னதமான கண்டுபிடிப்புகள் உலா வந்தவுடன், இன்னல்களும் இனிதே உடன் வந்தன.
            தலைவலி, காய்ச்சல் என்றால் கூட, நம்மைத் தவிடு பொடியாக்கிட பட்டியலிடப்படும் பல சோதனைகள். இரத்தம், மலம்,நீர், கபம், எக்ஸ்ரே, ஸ்கேன் இன்னும் பல இத்யாதிகள். 
 
                                 உண்மையில், மனசாட்சிக்கு பயந்து இத்தனையும் எழுதாத மருத்துவர்கள் பலரை நோயாளிகளே சந்தேகிப்பதுமுண்டு, எழுத நிர்ப்பந்திப்பதுமுண்டு. எங்கு செல்கின்றன இதனால் உருவாகும். கழிவுகள்?
                             ஒருமுறை பயன்படுத்தி உதறுகின்ற சிரிஞ்சுகள், ஊசிகள், புண்களைத் துடைக்கும் பஞ்சு, காயங்களில் கட்டப்படும் துணிகள், அறுவைசிகிச்சை செய்யும்போது அகற்றப்படுபவை, பிரசவ காலத்தில் வெளியாகும் நஞ்சுக்கொடி என இவையனைத்தும் மருத்துவக்கழிவுகள். இவற்றை முறைப்படி அப்புறப்படுத்தாவிட்டால், மனிதனுக்கு இவையே எமனாகும்.
                          எத்தனை மருத்துவமனைகளில் அதற்குரிய வசதிகளுள்ளது? எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது? மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவலொன்று உண்டு. மருத்துவக்கழிவுகள் சட்டத்தின்படி, மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கென்று வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதனை பின்பற்றும் மருத்துவமனைகள் மிகச்சில என்பதே அது. விளைவு: இந்தியாவில் சுமார் 15,000 மருத்துவமனகைளுக்கு, வாரியம் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளது.
                               இந்தியாவில் தினசரி சுமார் 4 இலட்சம் கிலோ மருத்துவக்கழிவுகள் உருவாகுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. அவற்றில் சுமார் 55சதவிகிதம் மட்டுமே விதிகளுக்கிணங்க அழிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, வீதிகளில் எறியப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.                 
                            சமீபத்தில் கூட நெல்லையிலுள்ள பிரபல மருத்துவமனைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில், மனித உறுப்பொன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கப்பட்டு, பின்னர் அதனை அவர்களே எடுத்துச் சென்ற நிகழ்வொன்று உண்டு. 
                                   அதற்கு அவர்கள் தந்த விளக்கம் அதனினும் கொடுமையானது. சர்க்கரை நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தப்பட்டதாம், அந்த உடலுறுப்பு. மருத்துவமனை துப்புரவுப்பணியாளர் கவனக்குறைவாய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்களென்று, விளக்கம் வேறு தந்தார்கள்.நாங்கள் விசாரித்து அறிந்துகொண்டதெல்லாம், அதிக எடையிருக்குமென்பதால் மட்டுமே,  அது குப்பைத்தொட்டிக்கு வந்ததென்று.
            தனியார் நிறுவனத்துடன், மருத்துவக்கக்கழிவுகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டால், கிலோவிற்கு ரூ.20 முதல் 40 வரை வசூலித்துக்கொண்டு, அதனை தனியார் நிறுவனம் முறையாக அப்புறப்படுத்த ,மாசுகட்டுப்பாட்டு வாரியம் வசதியளித்துள்ளது.
 
                                  முறையாக அப்புறப்படுத்தப்படாத மருத்துவக்கழிவுகளால், காச நோய் உள்ளிட்ட கடும் நோய்கள் பரவுமென்பதால், தேசத்தின்மேல் நேசம் கொண்டு, தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுவோம். 
                     நோய் தீர நாடுமிடமே, நோய்கள் தர வேண்டாமே!
Follow FOODNELLAI on Twitter

2 comments:

sakthi said...

வணக்கம்.ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும் மருத்துவ கழிவுகளை எரிக்க இன்சினரேடர் வசதிகளை மருத்துவ மனைகளில் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும் என மருத்துவமனைகளை நிர்ப்பந்திக்கவேண்டும் என்பது என் கருத்து.

உணவு உலகம் said...

தனி தனியே ஒவ்வொரு மருத்துவமனையும் இன்சினரேட்டர் நிறுவ மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதிப்பதில்லை. எனவேதான் பல நகரங்களில் சேரும் மருத்துவ கழிவுகளை ஊருக்கு வெளியே ஒரே இடத்தில் முறையாக கழிக்கவே தனியார் வசம் இப்பணி ஒதுக்கப்படுகிறது.