இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 17 March, 2013

பள்ளிகளுக்கருகில் பிட்சாக்குப் பதிலா பழங்கள்.

         
        "பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

                   மத்திய சுகாதார அமைச்சர், குலாம் நபி ஆசாத், லோக்சபாவில், எழுத்து மூலமாக அளித்த பதில்: நாடு முழுவதும் உள்ள, பல பள்ளிகளின் கேன்டீன்களில், "பாஸ்ட் புட்' வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை உணவுகளில், கொழுப்பு சத்து அதிகம் இருப்பதோடு, சர்க்கரை, உப்பு, காரம் ஆகியவையும், அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளில், உடல் நலத்துக்கு பயன் அளிக்கும், புரோட்டின், விட்டமின், மினரல் ஆகியவை போதிய அளவில் இல்லை. கரிமப் பொருள் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களும் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற உணவுகளையும் சாப்பிடுவதாலும், குளிர்பானங்களை அருந்துவதாலும், குழந்தைகளுக்கு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த வகை உணவுகளையும், குளிர்பானங்களையும், பள்ளி கேன்டீன்களில் விற்பனை செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்கள், மாநில சுகாதார அமைச்சர்களுக்கு கடிதங்கள் மூலம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாஸ்ட் புட்' வகைகளுக்கு பதிலாக, காய்கறி, பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதோடு, அவற்றின் பயன்பாடுகளையும், மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.
                   இதுகுறித்து, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பீட்சா, பர்கர் போன்ற, உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதோடு, உடல் ரீதியான, வேறு பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் பாதிப்பு, இதனால் அதிகம் ஏற்படுகிறது. இந்த உணவு வகைகளை கட்டுப்படுத்த, அரசு சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவ்வாறு, டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Follow FOODNELLAI on Twitter