இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 13 May, 2013

கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி

 பயிற்சி வகுப்பில் பாந்தமாய் முனைவர் திரு.சுப்பிரமணியன்
                                        
                        மாதா, பிதா, குரு தெய்வம் என்பது நம்  ஆன்றோர் வாக்கு. ஆசிரியர் ஒருவருக்கு சொல்லும் ஒரு செய்தி, அவர் கற்பிக்கும் ஓராயிரம் குழந்தைகளைப் போய்ச் சேரும். அந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் சொல்லும் ஒரு நல்ல செய்தி, அக்குழந்தையின் குடும்பத்தையே யோசிக்கச்செய்யும். இத்தகைய ஆக்கபூர்வமான செயல்  கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மகராஜ்களின் ஆசிகளுடன், அக்கல்லூரியில் பணிபுரியும் முனைவர் திருசுப்பிரமணியன் அவர்களின் ஆர்வத்தால், ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. 
                               முனைவர் திரு.சுப்ரமணியன் அவர்களுக்கு ஈடு கொடுத்து இன்முகத்துடன் பணியாற்றிடும் திரு.பிரபு, அங்கு ஆண்டுதோறும் ஆசிரியப் பயிற்சி வகுப்புகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்திடும் தோழர்.


தொழில்நுட்ப உதவி: திரு.பிரபு.
                           என்னை அறிமுகம் செய்துவிட்டு, அங்கிருந்த முன் வரிசை பெஞ்சில் அமர்ந்து என்னுரையை ரசித்துக்கொண்டிருந்தார் முனைவர் திரு.சுப்பிரமணியன்.  இரண்டரை மணி நேரம் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. உணவு பாதுகாப்பு குறித்து அறிந்த தகவல்கள் எல்லாம் எடுத்துச்சொன்னேன். 


                    பாடம் நடத்தியே பழகிவிட்ட ஆசிரியர்களல்லவா! பல நேரம் கேள்விகளாலேயே துளைத்தெடுத்தனர். அத்தனையும் குறித்து வைத்துக்கொண்டு, கேள்வி நேரத்தில் கேட்டுத்தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிக்கொண்டேன். 


                   இரண்டு மணி நேர வகுப்பின் இறுதியில் அரை மணிநேரம் கேள்வி கேட்க ஒதுக்கப்பட்டது. எத்தனை, எத்தனை சந்தேகங்கள்,இத்தனை நாள் எங்கு வைத்திருந்தார்களோ! அத்தனைக்கும் விளக்கங்கள் அளித்து முடித்தேன்.


           ஆசிரியர் பணி என்று வந்துவிட்டபோதும், சிலரிடம் அனைவர் முன்னிலும் கேள்வி கேட்க தயக்கம். அரங்கில் அமைதியாய் இருந்தவர்கள், அத்தனை கேள்விகள் வைத்திருந்தனர் அவர்கள் மனதில். குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம், சாக்லேட் கொடுக்கலாமா, கூடாதா, அந்த IQ கொடுக்கிற பானம் கொடுக்கலாமா, கூடாதா?, நான் அந்த பானத்தைக்கொடுத்தா, என் குழந்தை உசரமா வளர்ந்துருவானா, எந்த ஹெல்த் டிரிங் நல்லது? இப்படி பல கேள்விகள். 


                      வீட்டில் தானியங்களைச் சேர்த்து நம் முன்னோர் சொல்லிக்கொடுத்த வழியில் சத்து பானங்கள் தயாரியுங்கள், அதுவே மிக நல்லது. எங்களுக்கெல்லாம் எங்க பாட்டி, எள்ளுருண்டை, நெய்விளங்கா என சத்தான பண்டங்கள் செய்து தந்திருக்காங்க, இன்றைய பிள்ளைங்களுக்கு அது கிடைக்குதா? அதைச் செய்து கொடுங்கள் என்று என் கருத்தைப்பதிவு செய்தேன். துரித உணவுகள் குழந்தைகளுக்கு என்றும் துன்பமே தரும், இயற்கையாய் விளைந்த பழங்களைக்கொடுங்கள் அவையே குழந்தைகளின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றேன். 


                     பிற்பகல் உணவு இடைவேளையில் அக்கல்லூரியின் செயலர் மகராஜ் அவர்களுடன் சிறிது நேரம் உரையாட சந்தர்ப்பம அமைந்தது. துறவற வாழ்வில் அவர்கள் முகத்தில் தெரியும் தேஜஸ் என்னை ஆச்சரியமடையச்செய்தது. 

அடுமனை குறித்த வினாவுடன் ஆசிரியர்.

                      மீண்டும் பிற்பகலில் வேறு ஒரு குழுவிற்கு உணவு பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தேன். அதில் ஒரு ஆசிரியர் எழுந்து, ஒரு பேக்கரிக்கு ஆய்விற்கு செல்கிறீர்கள், அங்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மீது எந்த வித லேபிள்களும் இல்லை. அந்த சூழலில், அந்த மூலப்பொருட்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா, அல்லது அதைப்பயன்படுத்தும் அந்த பேக்கரி மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று வினவினார். எனது பதில் என்னவாயிருந்திருக்குமென்று எண்ணுகிறீர்கள்?
                             சரி, சைடு பிசினசா பேக்கரி தொழில் பண்ணுறீங்கதானே என்றேன்? அப்படியே விக்கித்துவிட்டார் சில நொடிகள். சுதாரித்து சில நொடிகளுக்குப்பின் ஆமாம் சரிதான் என்றார். லேபிள் இல்லாத மூலப்பொருளை வாங்கியது பேக்கரிக்காரரின் தவறுதானே, லேபிளே இல்லாதபோது, அதன் தயாரிப்பாளரை எங்கு போய் நாங்கள் தேட முடியும்? அதற்கு முறையாக பில்லும் கொடுத்திருக்க மாட்டார்கள்தானே என்றேன். ஆம் சரிதான் என்றார். அப்ப நாங்க பேக்கரிக்காரர் மீதுதானே நடவடிக்கை எடுக்க முடியும் என்றேன். ஏற்றுக்கொண்டார். சரி, இனியாவது விலை குறைவாகக்கிடைக்கிறதேயென்று, லேபிளும், பில்லும் இல்லாத மூலப்பொருட்களை வாங்கிப்பயன்படுத்தாதீர்கள் என்று என் வேண்டுகோளை வைத்தேன். இனி நானும் மாற்றிக்கொள்வேன் என்றார்.

இன்ஸ்டண்ட் கவிதை
                         முற்பகல் வகுப்பின் முடிவில், முன்வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியை ஒருவர், தாம் ஒரு கவிதை எழுதியுள்ளதாகவும் அதனைப்படிக்க அனுமதி வேண்டுமென்றும் கேட்டார். அது உணவு பாதுகாப்பு குறித்து உரை கேட்டதின் தாக்கமென்றார். இன்ஸ்டண்ட் கவிதை இனிக்கத்தான் செய்தது. நன்றி. 

Follow FOODNELLAI on Twitter

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரின் சந்தேகங்களையும் பதில்களையும் - நேரம் கிடைக்கும் போது பதிவு செய்யவும்... நன்றி...

இன்ஸ்டண்ட் கவிதை இனிமை...

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் ஆபிசர் ..

இராஜராஜேஸ்வரி said...

உணவு பாதுகாப்பு குறித்து உரை -
கற்றுத்தருவோருக்கு ஒரு கலகலப்பான பயிற்சி --பாராட்டுக்கள்..

நிலாமகள் said...

மராஸ்மா என்றால்...?

ஊரையே வரவழைக்கும் மாரடைப்பு.... ரசிக்க வைத்த வாரத்தைப் பிரயோகம்

கவிதையின் கடைசி வரியும் அழகு.

கற்பித்தல் அழகிய கலை. அதுவும் கற்பிப்பவர்களுக்கே கற்பிப்பதென்பதை அனாயசமாக செய்து விட்டீர்கள்.