இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 8 July, 2013

சாட்டிலைட் இணைப்பு செய்த சதி.

                              
திடீரென புதன் மாலை சன் டி.வி.யிலிருந்து  அவசர அழைப்பு. இன்று இரவு 9 மணியளவில், சன் டி.வி.யில் உணவில் கலப்படம் குறித்து  நடைபெறும் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுகோள் விடுத்தனர். அண்மையில், உச்ச நீதிமன்றம், வட மாநிலங்களில், செயற்கை பால் விற்பனை செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்து, அதன்மீது நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது இந்த நிகழ்ச்சிக்கான அடிப்படைக்காரணம்.

                                          துறை ரீதியான அனுமதி பெற்றுத்தான் மீடியாவில் பங்குபெறவேண்டுமென்பது அரசு ஊழியர்களுக்கான நடைமுறையென்பதால், மாவட்ட அதிகாரியுடன் பேசி அவர்கள் அனுமதி பெற்றனர். நானும் மாவட்ட அலுவலரிடம் அனுமதி பெற்றே இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றேன்.
                                         நான் நெல்லையிலும், சென்னை டி.வி. நிலையத்தில் இருவரும், கோவை,ஈரோடு, மதுரை என வெவ்வேறு ஊர்களில், ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களும் அந்தந்த ஊர்களிலுள்ள ஸ்டுடியோவில் அமர்ந்து சாட்டிலைட் மூலம் இந்த விவாதத்தில் இணைக்கப்பட்டனர். அதில் சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக, நெல்லைக்கான இணைப்பு சரிவர கிடைக்கவில்லை. மூன்றே மூன்று முறை மட்டுமே விவாதத்தில் என் கருத்துக்களை பதிவு செய்ய இயன்றது.
                                             முதல்முறையாக, கலப்படத்தைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தேன். அடுத்து,விவாதத்தில், உணவு பாதுகாப்புத்துறையில், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் குறைவு எனவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லையென்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது,இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில்தான் 585 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கிறார்கள். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. வியாபாரிகளில் சிறு வியாபாரிகளை மட்டுமே வழக்கில் சிக்க வைக்கிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, சட்டத்தின் முன் அனைவரும் சமம், எங்கெங்கு கலப்படம் இருக்கலாமென்ற சந்தேகம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறதென்ற என் கருத்தைப்பதிவு செய்தேன்.
                                  உணவுக்கலப்படத்தைத்தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் சரிவர எடுக்கப்படுவதில்லையென்றும், கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமே 2 வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கருத்து மதுரை அறிவார்ந்த வழக்கறிஞர் திரு.அருண்குமார் அவர்களால் முன்வைக்கப்பட்டபோது, இந்த சட்டம் அமலுக்கு வந்ததே 2011ல்தான். வந்தவுடன்,  நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தடை கோரிய வழக்குகள் காரணமாக உடனடியாக தீவிர நடவடிக்கைகள் இல்லை. தற்போது, அரசு அந்த வழக்குகளில் தக்க ஆதாரங்களை அளித்து, அவற்றை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால், இனி சட்டம் முறையாக அமல்படுத்தப்படும் என்றும் பதிலளித்தேன். மேலும், திருநெல்வேலியில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உணவு கலப்படத்தடைச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தையும் பதிவுசெய்தேன். 

விவாதத்தில் பேசப்பட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்த விளக்கங்கள்: (சொல்ல நினைத்து, சாட்டிலைட் இணைப்பு கிடைக்காததால் சொல்ல முடியாமல் போனவை)

செயற்கை பால்:  இது யூரியா, காஸ்டிக்சோடா, விலை குறைவான எண்ணெய் மற்றும் விலை குறைந்த டிடர்ஜெண்ட் பவுடர் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.
              பசுவின் பாலானாலும், எருமைப்பாலானாலும், கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் என இருவகை சத்துக்கள் உள்ளன. இது இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம். செயற்கைப் பாலிலும் இத்தகைய சத்துக்கள் இருக்கவேண்டுமே என்ற கொடூர எண்ணமே

  1. யூரியாவைச்சேர்ப்பதின்மூலம் கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் அதிகமாகக் காட்டுவதற்கும்,
  2. பால் விரைவில் கெட்டுப்போகாமலிருக்க, அதன் அமிலத்தன்மையை சமன்படுத்த காஸ்டிக் சோடாவையும்,
  3. பாலில் கொழுப்பு சத்து கணிசமாகக் காட்ட, எண்ணெயையும்,
  4. அந்த எண்ணெய் தண்ணீரில் கரைய சோப்பு பவுடரினையும்

                  கலந்து செயற்கைப்பாலை  உற்பத்தி செய்திட வைத்தது. எத்தனை மோசமான பொருட்கள் கலந்தது இந்த செயற்கைப்பால். குழந்தைகள் அருந்தினால் என்னவாகும்? நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
                              உணவின் தரத்தை அறிந்து கொள்ள தரமான ஆய்வகங்கள் தமிழகத்தில் இல்லையென்றோர் வாதம் வைக்கப்பட்டது. தமிழகத்தில், சென்னை, தஞ்சாவூர்,சேலம், கோயம்புத்தூர்,மதுரை, பாளையங்கோட்டை என ஆறு இடங்களில் அரசு உணவு பகுப்பாய்வுக்கூடங்களை அமைத்துள்ளது. இவை அனைத்துமே, அத்தனை கட்டமைப்பு வசதிகள் உள்ளடக்கியவை. இன்றைய காலகட்டத்திற்கேற்ப நவீன உபகரணங்கள் உள்ளடக்கியவை.
                    இந்த ஆய்வுக்கூடங்களில், தனிநபர் எவரேனும் எந்த ஒரு உணவுப்பொருளில் சந்தேகம் ஏற்பட்டாலும், பகுப்பாய்வு செய்து அறிக்கை பெறலாம். இவை தவிர்த்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ACCREDITED LABORATORIES தனியார் ஆய்வகங்களும் உள்ளன. 
                             உணவுப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்தான் சந்தேகப்படும் உணவுப்பொருட்களை மாதிரி எடுத்து அனுப்ப வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு நுகர்வோருக்கும் அந்த உரிமை உள்ளது. அவ்வாறு, தனிநபர் சந்தேகப்பட்டு எடுத்து அனுப்பும் உணவுப்பொருள் தரமற்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டால்,  துறை ரீதியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
                                         க்டைசியாக ஒன்று, ஒரு குழந்தை பிறப்பதற்கு பத்து மாதம் காத்திருக்கிறோம். அது பிறந்து வளர்ந்து, நடை பழக அடுத்து ஒரு பத்து மாதம் காத்திருப்பதில்லையா? இங்கும் அப்படித்தான். சட்டம் அமலுக்கு வந்துள்ளதே, 2011ல்தான். நீதிமன்ற வழக்குகள், நடைமுறைப்படுத்துவதிலுள்ள  சிக்கல்கள் இவற்றையெல்லாம் தாண்டி இப்போதுதான் முறையாக அமலாக உள்ளது.குழந்தையை கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, நடைபழகவில்லையென நாம் சொல்லுவ்து நியாயமாகுமா?   நிச்சயம் நம் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான உணவு கிடைத்திட புதிய சட்டம் வழிவகுக்கும்.  அதற்கு துறை அலுவலர்கள் அனைவரும் உறுதுணையாய் நிற்போம். நன்றி.
                                   அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க அமைந்த ஒரு அருமையான சந்தர்ப்பம். முடித்து வந்தவுடன் வந்த வாழ்த்துக்கள் மிக மகிழ்ச்சி அளித்தாலும், நிகழ்ச்சி நடைபெறும்போதே, காலை வாறும் கலைகளை உடன் பணிபுரிவோர் சிலரே அரங்கேற்றியது சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது. வாழ்க வளமுடன்.
                                         இதோ இந்த வீடியோ லிங்கில் நான் பதிவு செய்த தகவல்கள்: 07.45, 35.05 மற்றும் 50.30 நிமிடங்களில்:

Follow FOODNELLAI on Twitter

16 comments:

இராஜ முகுந்தன் வல்வையூரான் said...

இணைய இணைப்பு சதி பண்ணித்தான் இருக்கிறது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடுத்த முறை ஆபீசருக்கு வாய்ப்பு தரும் பொது இணைப்பு சரி செஞ்சுடுங்க சன்டிவி நிர்வாகமே!!!

Avargal Unmaigal said...

என்ன கொடுமைங்க செயற்கை பால் தாயாரிப்பதை சொன்னேன்.. இதை அருந்தினால் வியாதிஸ்தர்கள் உலகமாக இந்தியா ஏன் மாறாது

MANO நாஞ்சில் மனோ said...

சதி பலமால்ல பண்ணி இருக்கு, ஓகே ஆபீசர் உங்களைப் பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்...!

MANO நாஞ்சில் மனோ said...

உணவு கலப்படம் பற்றிய சிறப்பான விவாதம் மற்றும் ஆபிசரின் எழுத்து பதிவு...வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....!

சீனு said...

மிக அருமையான தகவல்களைக் கொடுத்து இருக்கீங்க... எனக்கு அன்றைய தினம் ஷிப்ட் இருந்தததால் பார்க்க முடியவில்லை...

நாளொரு தொலைகாட்சியில் உங்கள் பேட்டி இடம் பெற்று இன்னும் மிகப் பெரும் பிரபலமாக வாழ்த்துக்கள்

சே. குமார் said...

சந்தோஷம் அண்ணா...

இணைப்பு சதி செய்து உங்களைப் பேசவிடாமல் பண்ணியதால் நிறைய விஷயங்களைப் பற்றி பேச முடியாமல் போய்விட்டதே... யூரியா கலந்த பால் பற்றி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Subramaniam Yogarasa said...

வருத்தப்படாதீங்க,ஆபீசர்!எங்கும் எதிலும் கலப்படம் இருக்கும் போது..../////நிகழ்ச்சி நடைபெறும்போதே, காலை வாறும் கலைகளை உடன் பணிபுரிவோர் சிலரே அரங்கேற்றியது சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது. வாழ்க வளமுடன்.////ஆபீசில் கலப்படம் இருக்காதா என்ன?ஹ்ஹூம்!

s suresh said...

பாக்கெட் பாலெல்லாம் இப்படித்தான் தயாரிக்கறாங்களா? பயமா இருக்குது! நல்லதொரு பகிர்வு நன்றி!

நாய் நக்ஸ் said...

அட என்னா ஆபீசர்.....அடுத்து நாம உலக அளவில கலப்படத்தை பத்தி பேசபோறோம்....

:-))))))))))

கோகுல் said...

தனியார் பால் நிறுவனங்கள் பாலினை டேங்கரில் எடுத்து செல்லும் சமயங்களில் கெட்டு விடாமலிருக்க காஸ்டிக் கலப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.,பாலையே செயற்கையாக தயாரிக்கிறார்களா??????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.,

Vel Murugan said...

சுதந்திரம் 1947 ல வந்தது. சட்டம் 2011 வந்தது

அதனால பொறுமையா இருங்க

தனியார் பால் உற்பத்தி நிலையங்களை அனுமதித்தது அரசுதானே?

ஓ அதற்குதான் பொறுமையா இருங்க என சொன்னீர்களோ

செங்கோவி said...

எங்களையெல்லாம் பெருமைப்பட வைக்கும் ஆபீசரின் மற்றொரு மைல்கல். ரொம்ப சந்தோசம் சார்.

செங்கோவி said...

’இந்த அரசு மோசம், ஒன்னியும் சரியில்லை’-ன்னு நீங்க பேசியிருந்தா, சன் டிவி சேட்டிலைட் மக்கர் பண்ணியிருக்காதுன்னு நினைக்கிறேன்!!!!

koodal bala said...

நானும் மிகுந்த ஆவலோடு தொலைகாட்சி முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் என்றுமில்லாத அதிசயமாய் தாங்கள் பேசுவது மட்டும் சிக்னல் இல்லாமல் ஆகிவிட்டது ...சில சவாலான கேள்விகளுக்கு தங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதைக் கேட்க ஆவலாய் இருந்தேன் .... நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது....

Manickam sattanathan said...

இன்றுதான் உங்கள் பக்கம் வர முடிந்தது. பால் கலப்படம் பற்றின தங்களின் விளக்கங்கள் அதிர வைத்தன .விஷமான வேதிப்பொருட்கள் கொண்டு செயற்கை பால் தயாரிக்கபடுவது மகா கொடுமை. youtube இல் பார்த்தேன்.

தொடரட்டும் தங்களின் சீரிய பணி