இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 5 September, 2014

தேயிலையில் கலப்படம் தெரிந்துகொண்டால் சுகப்படும்.

                                   
     
                       நம்மள்ல ரொம்ப பேரு, டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, “நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க”ன்னுதான்! அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம். 
                      மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
                         ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க. ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும். 
                              கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத்துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும். 
                                 இப்படித்தான் எங்க சோதனையை, திருநெல்வேலி மாநகரப்பகுதியிலுள்ள டீக்கடைகள்ல கடந்த இரு வாரங்களுக்கு முன்னால ஆரம்பிச்சோம். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல, பல கடைகளில் கலப்படத்தேயிலை கண்டுபிடிச்சோம்.


            
                          எப்படித்தான் தயாரிக்கிறாங்க இந்த கலப்படத்தேயிலையை? கடைகளில் டீ போடப்பயன்படுத்தியபின் தூர எறியப்படும் சக்கைதான் கலப்படத்தேயிலைக்காரர்களை சக்கைப்போடு போடவைக்கின்றது. ஆம், அந்த சக்கைத்தேயிலையை சேகரித்து, அவற்றில் ரசாயன நிறமிகளைக்கலந்து, நல்லா ஸ்ட்ராங்க் டீ கிடைக்கும்னு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அந்தக்கலப்படத்தேயிலையை சந்தைப்படுத்துறாங்க.


              சரி,டீக்கடைகள்லதான் இந்தக்கொடுமைன்னு, சந்திப்புப்பகுதியிலுள்ள ஒரு பிரபல சைவ உணவகத்துக்குள் காலடி எடுத்துவைத்தோம். கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப்போன அங்க ரெண்டு கொடுமை டங்கு டங்குன்னு குதிச்சுக்கிட்டு இருந்ததாம்னு சொல்லுவாங்களே, அதைப்போல, முன்பக்கம் சாப்பிடும் பகுதி ரொம்ப சுத்தமா இருந்தது. உள்ளே உணவு தயாரிக்கும் பகுதியோ உவ்வே! 


               மாவு அரைக்கப்பயன்படுத்திய கிரைண்டர் டிரம்மின் விளிம்புகள் துருபிடித்து, ஓட்டை விழுந்து, ஒரு கையை உள்ளே விட்டு எடுக்கும் அளவுக்கு இருந்தது. கூரை எங்கும் சிலந்திவலை. சமையலுக்குப்பயன்படுத்த வைத்திருந்த இரண்டு கால் லிட்டர் நல்லெண்ணெய் பாக்கட்களைப் பார்த்தவுடன் பக்கென்றது. “விளக்கெரிப்பதற்கு மட்டும்” என்று தமிழிலிலும், ஆங்கிலத்தில் “For External Use Only"  என்றும் தயாரிப்பாளர் தன்னைக்காத்துக்கொள்ள அச்சிட்டிருந்த தரம் குறைந்த பாக்கட்டுகள். அவை உணவுத்தரம் வாய்ந்த எண்ணெயே அல்ல. 10 நாட்களுக்குள் குறைகளை நிவர்த்திசெய்து வைக்கவும், மறு ஆய்வு செய்ய வருவோம் என்று எச்சரித்து அறிவிப்பு கொடுத்துவிட்டு, அங்கிருந்த உணவுத்தரமல்லாத பொருட்களை அழித்துவிட்டு வந்தோம்.

                
                               இவை போதாதென்று, அத்தனை பெட்டிக்கடைகளிலும் “ரஸ்னா” என்ற பெயரில் விற்கப்படும் போலி குளிர்பான பாக்கட்டுகள்.  எந்த தண்ணீரில் தயாரிச்சாங்களோ! தயாரிப்பு தேதியோ, தயாரிப்பாளர்  விலாசமோ, எந்த தேதிவரை பயன்படுத்தலாம் என்ற விபரமோ ஏதுமில்லை. 


                அத்தனை போலி குளிர்பான பாக்கட்டுகளையும் பறிமுதல் செய்து அழித்ததோடு, அதை விநியோகித்தவரின் விலாசம் வாங்கி, அங்கிருந்த பாக்கட் குளிர்பானங்களையும் அழித்தோம்.








                        வேண்டும் விழிப்புணர்வு நுகர்வோருக்கு.                                     

Follow FOODNELLAI on Twitter

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

எச்சரிக்கை தரும் ஆய்வுப் பகிர்வுகளுக்கு நன்றிகள்.!

Yoga.S. said...

வணக்கம்,ஆபீசர்!நலமா?///தொடரட்டும் உங்கள் சேவை,தமிழக மக்களுக்கு!

”தளிர் சுரேஷ்” said...

வெளியிடங்களில் எந்த உணவையும் உண்ணாதிருப்பதே நலம் என்று தோன்றுகிறது! நாவைக் கட்டினால் நலம் வாய்க்கும் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது ஹேர் டை டீயா ? இனி டீ'யே வேண்டாம் சாமீ...

பிடிங்க ஆபீசர் ஒருத்தனையும் விடாதீக...

Avargal Unmaigal said...

சார் உங்களிடம் ஒரு கேள்வி இப்படி கலப்படம் பண்ணி உணவுப் பொருட்களை தயாரித்து விற்கும் ஒட்டலின் உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்க சட்டத்தில் இடமில்லையா?

Avargal Unmaigal said...

திருநெல்வேலியில் மக்கள் கூடும் இடங்களில் பெரிய விளம்பர போர்டு வைத்தி இப்படி செய்யும் ஹோட்டல்களின் பெயரை அதில் தெரிவிக்கலாமே அதை பார்க்கும் மக்கள் அந்த ஹோட்டல்களை புறக்கணிக்க செய்து ஆட்டோமெடிக்கா இழுத்து மூடச் செய்யலாமே?

Avargal Unmaigal said...

இனிமேல் திருநெல்வேலி வந்தால் டீ காப்பி குடிப்பதற்கு பதிலாக டாஸ்மாக் சரக்கை வாங்கி குடித்து விடலாம் போலிருக்குதே.. அப்படி டாஸ்மாக் சரக்கை குடிக்காதவர்கள் பேசாம உங்க வீட்டிற்கு வந்துவிட வேண்டியதுதானே

உணவு உலகம் said...

நன்றி சகோ இராஜராஜேஸ்வரி.

உணவு உலகம் said...

நன்றி யோகா ஐயா.

உணவு உலகம் said...

”நாவைக் கட்டினால் நலம் வாய்க்கும்”- இதுதான் உண்மை தளிர்சுரேஷ். நன்றி சார்.

உணவு உலகம் said...

துணிக்குப்பயன்படுத்தும் சாயம்தான் ஜெண்டில்மேன் நாஞ்சில்மனோ. :)

உணவு உலகம் said...

Avargal Unmaigal: நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில். சட்டத்தில் உடனே ஜெயிலில் போட வழியில்லை. வழக்குத்தொடுத்து,நிரூபித்த பின்னர்தான் த்ண்டனை. நன்றி.வாங்க எங்க வீட்டுக்கு எப்ப வேணாலும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் ஆபீசர்...... உன்னதமான பணி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... இனி கடையில ஸ்ட்ராங் டீ குடிக்க மாட்டேன்.....

லைட் டீ குடிக்கலாமா?????

தமிழ்வாசி பிரகாஷ் said...

தொடரட்டும் உங்கள் சமூக பணி...