இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 6 April, 2015

உலக சுகாதார தினம்-உணவு பாதுகாப்பே உன்னத லட்சியம்.


இந்த ஆண்டு, உலக சுகாதார தினத்தின் (07.04.2015), உன்னத லட்சியமாய்  பாதுகாப்பான உணவு நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம்  உறுதி ஏற்கின்றது.

Ø   நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø  பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø  உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø  இத்தகைய நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø  பாதுகாப்பற்ற உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள். உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில், புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø  உடல்நல பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள் சுலபமாக தாக்குகின்றன.
Ø  உலக மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள்  விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
 இத்தருணத்தின் தேவை:
Ø   முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø  சுகாதாரம், விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø  முறையற்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics)  பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள் பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø  எனவே, பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும்.



உணவுப்பாதுகாப்பு உங்கள் சமையலறையிலிருந்து தொடங்கட்டும்:

Ø  சமையலறையையும், அங்குள்ள பாத்திரங்களையும், நம் கைகளையும் எப்போதும் சுத்தமாக வைத்திருப்போம்.
Ø  சமையலுக்கான மூலப்பொருட்களையும்,சமைத்த உணவையும் பிரித்தே வைத்திருப்போம்.
Ø  உணவினை முறையாகவும், முழுமையாகவும் சமைத்தே உண்போம்.
Ø  சமைத்த உணவை அதற்கான சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்போம்.
Ø  உணவு சமைக்க தரமான மூலப்பொருட்களையே பயன்படுத்துவோம்.
                                           
Follow FOODNELLAI on Twitter

3 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வீட்டம்மாவுக்கும் இந்த பதிவை படித்து காட்டினேன் ஆபீசர், மிக்க நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

உற்பத்தி ஆகும் இடமும், கழிவு போகும் இடமும் என்றும் சுத்தமாக இருக்க வேண்டும்...!

உணவு உலகம் said...

நன்றி Mano நாஞ்சில் மனோ மற்றும் திண்டுக்கல் தனபாலன்.