இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 24 August, 2015

ஷீரடி,சனிஷிக்னாபூர், புனே, தோரணமலை ஆன்மீகப்பயணங்கள்.

                         

                                                                   ஓம் சாய்ராம்.
                             கடந்த வருடமே செல்ல எண்ணி, கடந்த வாரம், ஷீரடி செல்ல வேண்டுமென நண்பர்கள் குழாமுடன் புறப்பட்டேன். நெல்லையிலிருந்து முதல்நாள் சென்னை நோக்கிய பயணம். அடுத்தநாள் பகல் முழுவதும், சென்னையில் போக்குவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.
              ஞாயிறன்று காலை 5 மணிக்கு சென்னையிலிருந்து புனே செல்லும் விமானத்தில் தொடங்கியது எங்கள் பயணம். சென்னை வந்திருந்த திருமதி & திரு.விஜயகுமார், நெல்லையிலிருந்து சென்னை வந்திருந்த திருமதி&திரு.கேசவபிள்ளை குடும்பத்தினர் மற்றும் திரு.கேசவபிள்ளை அவர்களின் மைத்துனர் குடும்பத்தினருடன் குழுவாகப் புறப்பட்டோம். அதிகாலை 3 மணிக்கு செக்கின் பண்ணவேண்டுமென்பதால், இரவு 2மணியளவில் புறப்பட்டோம். விமான நிலைய செக்கின் முடிந்து, காலை 5.15 மணியளவில் விமானம் புறப்பட்டது. 
                       இது முதல்முறை பயணமல்ல என்றாலும், விமானம்,கீழிருந்து மேலே வானத்தில் ஏறும்போது, நம் வயிற்றிற்குள்ளும் ஜிவ்வுன்னு  ஏறுது. விமானம் மேகக்கூட்டங்களைக் கடந்து பறந்தபோது, படங்கள் எடுப்பது அலாதி ஆனந்தம். பழைய பக்தி படங்களில், கைலாயத்தைக் காட்டும்போது, புகை பந்து பந்தாய் உருண்டோடுமே, அது போல், நாம் பறக்கும் உயரத்திற்குக் கீழே, மேகக்கூட்டங்கள் திரண்டு செல்வது பார்க்கப் பார்க்க பரவசம். 

காலை 7 மணியளவில், புனேவை அடைந்தது. விமானம் கீழிறங்கும்போதும்,மீண்டும் நம் வயிற்றில் அந்த ’ஜிவ்’ உணர்வு. புள்ளிகளாய் தெரியத்துவங்கும் கட்டிடங்கள், விமானம் கீழிறங்கும்போது இன்னும் இன்னும் பெரிதாய் துலங்கத் தொடங்கும். விமானத்தின் சக்கரங்கள் தரையைத் தொடும்போது, நமக்குள்ளும் ஒரு ‘ஜெர்க்’.

                         நேராய் ஷீரடி அடைந்து, அறையில் சற்றே ஓய்வெடுத்து, மாலையில் சாய்பாபாவின் தரிசனத்திற்குச் சென்றோம். சாய்பாபா பயன்படுத்திய பொருட்கள் ஒரு அறையில் வைத்திருக்கின்றனர். அவர் ஷீரடியில் வந்தமர்ந்த வேப்பமரம், ஆலயத்தினுள்ளே இருக்கும் மியூசியம், பள்ளிவாசல் ஆகியவற்றை தரிசித்துவிட்டு, சாய்பாபாவின் தரிசனமும் கண்டுவந்தோம். அதீத கூட்டம். என்றாலும் வரிசை நகர்ந்துகொண்டேயிருந்ததால், சற்றேறக்குறைய ஒரு மணி நேரத்தில் சாய் தரிசனம் கிடைத்தது. “உத்தி” மற்றும் “பூந்தி” பிரசாதங்கள் பெற்று வந்தோம்.  அப்புறமா கடைத்தெரு பக்கம் போனா, விதம்விதமாய் சாய் பொம்மைகள்.

                                    மறுநாள் காலை 4 மணிக்கு நடைபெறும் “ஆரத்தி”(நம்மூர்ல ‘தீப ஆராதணை’ன்னு சொல்றோம்)  காண, அதிகாலை 3மணிக்கே சென்றோம். இறைவனருளால், ஆரத்தியை நேரில் காணும் பாக்கியமும் பெற்றோம். அதிகாலை தரிசனம் முதல், சென்னையிலிருந்து வந்திருந்த திருமதி.சுபஸ்ரீ எங்கள் குழுவோடு இணைந்து கொண்டார். சுமார் 600 மாணவியருக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை.அங்கிருந்து, நேராக ரேணுகா தேவி ஆலயம் சென்றோம். 


                     இந்த ஆலயம் ஓர் பரிகார தலம். இங்கு திருமணமாகாத இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டுமென்றும், பிள்ளைப்பேறு தள்ளிப்போவோர் விரைவில் நல்ல குழந்தைப்பேறு வேண்டுமென்றும் வேண்டி அம்மனுக்கு பூ, வளையல், குங்குமம் வாங்கி பக்தியுடன் படைக்கின்றனர். வளையலில் இரண்டை அம்மனுக்கு அணிந்துவிட்டு, மீதமுள்ளவற்றை, நினைத்த காரியம் கைகூட ஆசிர்வதித்து திரும்ப வழங்குகின்றனர். 
                                   அங்கிருந்து, சனிஷிக்னாபூர் பயணம். 

           இந்த ஊரின் விசேஷம் என்னவென்றால், இங்குள்ள வீடுகளில் கதவுகள் இல்லை. இந்த ஊரில் திருடினால், ஊர் எல்லையைத்தாண்டுமுன்னர் கண்கள் குருடாகிவிடுமென்றோர் ஐதீகம். அதனால், திருடர் பயமின்றி, கதவுகளின்றி இருக்கின்றன வீடுகளெல்லாம். கோவிலில் சனி பகவானுக்கு, நல்லெண்ணெய் வாங்கி அபிசேகம் செய்கின்றனர். முன்னரெல்லாம், பக்தர்கள் நேரில் அபிசேகம் செய்ய அனுமதித்துள்ளனர். தற்போது, ஒரு பெரிய பாத்திரத்தில், நாம் ஊற்றும் எண்ணெய்,(மின்மோட்டார் இயக்கத்தில்) பைப்வழியாக சென்று சனி பகவானுக்கு அபிசேகம் ஆகின்றது. 
                மாலையில், மீண்டும் புனே வந்தடைந்து, அங்குள்ள மஹாகணபதி கோயிலில் தரிசனம் முடித்து, இரவு 11 மணிக்கு சென்னை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தபோது, திருமதி.சுபஸ்ரீயின்  எண்கணித புலமையை அறிந்து வியப்புற்றோம்.
மஹா கணபதி கோவிலில்,குழுவில் ஒரு பகுதியினர்
                            அதிகாலை 2 மணியளவில் நலமாய் சென்னை வந்தடைந்தோம்.
தோரணமலை பயணம்:

                          இறை நம்பிக்கை இல்லாதவர்களையும், இறைவன் இருக்கின்றான் என உணரவைப்பதில் சகோதரர் திரு.காஜா அவர்களுக்கு தனி இன்பம். என் நண்பர் ஒருவர், இறை மறுப்புக் கொள்கையுடையவர். ஆனால் இப்ப நிலைமையே வேறு. இறைவனை அவர் நினைக்காத நொடியில்லையெனலாம். எல்லாம் அவன் செயல். இறை மறுப்பு கொள்கையுடைய நண்பர் இப்பல்லாம் இறைவனைப்பற்றி பேச ஆரம்பித்தால், நாள் முழுதும் நம்மையறியாமல் நகர்ந்துவிடும். 
                               இரு நாட்களுக்கு முன், தோரணமலைக்கு வாறீங்களான்னு கேட்டாங்க அண்ணாச்சி. இதுவரை தரிசிக்காத ஸ்தலம்,உடனே வருகின்றேன் என்றேன். 23.08.2015  ஞாயிறன்று அதிகாலை ஐந்து மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகனைத் தரிசிக்கப் புறப்பட்டோம். நமக்கு மிக அருகிலேயே நல்ல பல ஆலயங்கள் இருந்தும், சென்று பார்ப்பதில்தான் தாமதம் ஆகின்றது. இந்த மலையில்தான் மகான் தேரையருக்கு, முருகப்பெருமான் காட்சியளித்துள்ளார்.
தூரத்திலிருந்து தோரணமலை
                           மொத்தம் 964 படிகள் ஏறி சென்றால், மலையுச்சியில் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். செல்லும் வழியிலேயே, லஷ்மி தீர்த்தம் இருக்கின்றது. 
லஷ்மி தீர்த்தம்
அதில் நீரெடுத்து குளித்துவிட்டு, மேலே சென்றால் அதுவரை ஏறிவந்த களைப்பெல்லாம் காணாமல் போய்விடுகின்றது.
     
படிகள்
        பல்லாயிரம் மூலிகைகள் செழித்து நிற்கும் வனப்பகுதியது. செல்லும் வழியெங்கும், முற்காலத்தில் மருந்துகள் அரைக்க பயன்படுத்திய கற்குழிகள் காணப்படுகின்றன. 
முற்காலத்தில் மருந்துகள் அரைக்க பயன்படுத்திய கற்குழிகள்
முற்காலத்தில் மருந்துகள் அரைக்க பயன்படுத்திய கற்குழிகள்
தோரணமலை உச்சியிலிருந்து
                              மலைமேல், முருகன், மகான் தேரையருக்குக் காட்சி தந்த இடம், அம்மன் ஆலயம் தரிசித்துவிட்டு அடிவாரம் வந்து, அங்கிருக்கும் விநாயகர் கோவிலை மீண்டுமொருமுறை வணங்கிவிட்டு வீடு திரும்பினால், உடலெங்கும் ஓர் உத்வேகம் உணர முடிகின்றது.
தோரணமலை முருகப்பெருமான்

கோவிலுக்கு மேலேயுள்ள சுனை


அடிவாரத்திலுள்ள விநாயகர் ஆலயம்

அடிவாரம்

Follow FOODNELLAI on Twitter

11 comments:

nellai ram said...

nice ..

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

ஆன்மீக பயண அனுபவங்களும், அழகான புகைப்படங்களும் அருமை.

2010ஆம் ஆண்டு கார்த்திகையன்று காலை தோரண மலை ஏறி முருகனை தரிசித்து வந்தேன். அகலம் குறைந்த குறுகலான படிகளாக இருந்தன. இப்போது ஏதும் சரி செய்திருக்கிறார்களா...

முதல் முறையாக சென்றதால் மெதுவாக ஏறி, இறங்கினோம். ஆனால் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் பூஜைக்காக மத்தாளம் பாறை ஊரில் இருந்து வரும் வயதான பூசாரி மலை ஏறி,இறங்கும் வேகம் ஆச்சரியம் தந்தது.

நாங்கள் சென்ற போது அவ்வளவாக பக்தர்கள் இல்லை. தங்களது பதிவின் கடைசி புகைப்படத்தில் தெரியும் வாகனங்களைப் பார்த்தால் தாங்கள் சென்ற தினம் கூடுதலான பக்தர்கள் வந்திருந்தார்கள் போல் தெரிகிறது.

பயணங்களும், பகிர்வுகளும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

நன்றி Nellai Ram, Kailasundaram Parameswaran.

உணவு உலகம் said...

துபாய்ராஜா: நன்றி. தற்போது படிக்கட்டுகள் பராமரிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் அந்த 70 வயது பெரியவர்தான் மலைமேல் பூஜைக்காக வருகின்றார். ஒருமுறை ஏறவே யோசிக்கிறோம் நாம். ஆனால், அவரோ, ஒருநாளைக்கு இருமுறைகூட ஏறி இறங்குகின்றார். அபிஷேகம் முடித்த வேகத்தில் அற்புதமாக அலங்காரம் செய்துவிடுகின்றார்.
பக்தர்கள் கூட்டம் பரவாயில்லை.

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் மிக அழகு ஆபீசர்...நினைத்ததெல்லாம் இறைவன் அருள் புரிவார்...

Kumky said...

அய்யா வணக்கம்,

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வலைப்பதிவர்கள் குழும நண்பர்களோடு ஷீரடி மற்றும் சனி ஷிங்கனாப்பூர் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அங்கேயிருந்த வீடுகள் கடைகளில் கதவுகள் பார்த்த நினைவு. அருகிலேயே அவுரங்காபாத் சென்று தங்கி அங்கிருந்து அஜந்தா குகை ஆச்சர்யங்களையும் பார்த்து வந்தோம். அஜந்தா யெல்லோரா குகைகளை பார்க்கும் வாய்ப்பினை தவற விட்டுவிட்டீர்களே...

உணவு உலகம் said...

நன்றி @நாஞ்சில் மனோ.

உணவு உலகம் said...

நாங்கள் கதவுகளில்லா வீடுகளைப்பார்த்தோம்.
நாங்கள் சென்றது ‘பேக்கேஜ்’ டூர் என்பதால், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. நன்றி @ கும்க்கி கும்க்கி நண்பரே.

sarav said...

Good Post , But you could describe how to reach this places so that others can also go over there

'பரிவை' சே.குமார் said...

ஆன்மீகப் பயணம் குறித்த பகிர்வும் படங்களும் அருமை சார்...