பசுக்கள் தரும் பாலைக்காய்ச்சி, பக்குவமாய் உரையும் ஊற்றி,அற்புதமாய் அறுசுவை உணவுடன் அம்மா பருகக்கொடுக்கும் தயிரும்,மோரும் தலைமுறைகள் மாற்றம்போல் தலை கீழாய் போனதெப்படி?
பசும்பாலிற்கும், எருமைப்பாலிற்கும் சுவை, சத்து, குணம் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. நம் நாட்டு பசு தரும் பாலிற்கும், வெளிநாட்டுப்பசு தரும் பாலிற்கும் வேறுபாடுகள் உண்டு.பசுக்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், நாம் அவற்றிற்கு வழங்கும் உணவிற்குத் தக்கவும் பாலின் தரம் வேறுபடும்.
ஒரே நாட்டிற்குள்ளும், மாநிலத்திற்கு மாநிலம் பாலின் தரம் வேறுபடும். பால் என்று எடுத்துக்கொண்டால், கொழுப்பு சத்து, கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள் என்று இரு வகையான சத்துக்களே அதில் உள்ளன. பிற சத்துக்களில், பாலில் அடங்கியுள்ள உயிர் சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை அடங்கும்.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகார் மாநிலங்களில் உள்ள பசுக்கள் தரும் பாலில், கொழுப்பு சத்து 4 சதவிகிதமும், பிற சத்துக்கள் 8.5 சதவிகிதமும் இருக்கும். அதுவே, நமது நாட்டின் பிற மாநிலங்களில் கொழுப்பு சத்து 3.5 சதவிகிதம் மட்டுமே இருக்கும்.
நாலுக்கும் ஐந்திற்கும் நடுவில் நாங்கள் விற்கும் பாலில் கொழுப்பு சத்து இருக்கும் என்ற விளம்பரம் எல்லாம் செயற்கையாய் கொழுப்பு சத்து ஏற்றம் செய்யப்பட்ட பாலையே குறிக்கும்.
ஒரு உணவு பொருளில் இயற்கையாய் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதும் கலப்படம் என்றே உணவு கலப்பட தடை சட்டம் சொல்கிறது. இயற்கையாய் பசுக்கள் சுரக்கும் பாலிலிருந்து, கொழுப்பை சுரண்டி எடுப்பதே மனிதனின் மகத்துவம்.
அப்பப்பா, ஆக்சிடோசின் கொடுமை என்றால், இது அதைவிட கொடுமை அன்றோ. ஆக்சிடோசின் ஊசியை போட்டு, அதிகம் பால் கறக்க,
பால்காரருக்கு ஆசை. பாலிலுள்ள கொழுப்பை எடுத்து, நெய்யை விற்க பால், தயிர் விற்பவருக்கு ஆசை. அதனை குடிக்க குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தன?
இங்கும் ஓர் உணவு விடுதி. அரசு ஊழியர் குடியிருப்பிற்கு அருகில் உள்ளதால், வார இறுதி நாட்களில், அமர்ந்து உணவருந்த அடிபிடியாய் இருக்கும். அது மட்டுமல்ல, ஓய்வு பெற்றோர் இல்லங்களுக்கே சென்று உணவை வழங்கும் உத்திகளும் உண்டு.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு மதிய வேளையில், அதிரடி சோதனை மேற்கொண்டோம். உணவுடன் வழங்கப்பட்ட தயிரில் கலப்படம் செய்யபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரி எடுத்து மதுரையில் உள்ள பகுப்பாய்வகம் அனுப்பி வைத்தோம்.
கிடைத்த அறிக்கையில், உணவு மாதிரியாக அனுப்பப்பட்ட தயிரில், கொழுப்பு சத்து குறைவாக இருப்பதாக குறைகள் கூறப்பட்டிருந்ததால், உரிய அனுமதி பெற்றே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.