இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 31 August, 2010

மண்ணுலகம் காக்க!

                பிளாஸ்டிக் அதுவும் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக்,
                   பிள்ளைகள் வளர்ந்து அடுத்து வரும் தலைமுறைக்கும்  துன்பமே தரும். 

                  மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்போம்.                  மண்ணுலகம் காப்போம்.
Follow FOODNELLAI on Twitter

Monday, 30 August, 2010

FACEBOOK

Sankaralingam Rajagopal

Create your badge
Follow FOODNELLAI on Twitter

கண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.

                                                      ஸ்வீடனில் உள்ள லிங்க் கோபிங்  பல்கலைகழகத்தில் பணியாற்றும் மேகிரிப்த் எனும் பெண் விஞ்ஞானி  செயற்கை கருவிழி உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை கண் தானம் மட்டுமே பார்வை வரம் தரும் என்றிருந்ததை மாற்றி இவர் செயற்கை கருவிழி உருவாக்கி பல உள்ளங்களில் நம்பிக்கை ஒளி ஏற்றியுள்ளார். 
 
                           மனித திசுக்கள் மற்றும் இணைப்பு திசுவின் வெண் புரதம் போன்றவற்றை செயற்கையாய் இவர் வளரசெய்தார். பின்னர் அவற்றை கண்களில் பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்து பார்வை இழந்தவர்களில் ஒருவருக்கு பொறுத்த செய்தார். மருத்துவ உலகின் மாபெரும் சாதனையாக அது அமைந்தது. ஒளி பிறந்தது. உவகையும் பிறந்தது. ஒரு கோடி பார்வை இழந்தவர்கள் வாழ்வில்.
                        காலம் கனியட்டும். கனியுமட்டும்              
                        கண் தானம்  செய்வதில்
                      கருத்துடன் இருப்போம். 
                      இருக்கும்போது இரத்த தானம்
                    இறந்த பின்னும் உடல் தானம்.
Follow FOODNELLAI on Twitter

Saturday, 28 August, 2010

இனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்

                                 சரக்கு மட்டுமே இனிப்பு. சங்கடங்கள் தருவதே இவர்கள்  பிழைப்பு. சந்திப்பில் அன்று சக அலுவலர்களுடன் சென்று திடீர் ஆய்வு. சந்தேகங்கள் அங்கு நிஜங்களாயின. இனிப்பு மட்டுமே அவர்கள் தயாரிக்கவில்லை. இன்னல்களையும் சேர்த்தே தயாரித்து கொண்டிருந்தனர். அத்தனை அழுக்கு உடையில் - சரக்கு மாஸ்டர்கள். உடலில்,வியர்வை வழிந்தோடி, தயாரிப்புகளுக்கு தனி சுவை  சேர்த்து கொண்டிருந்தன. 
                               தீயில் வேகுவது பண்டங்கள் மட்டுமல்ல, அந்த மனிதர்களும்தான். ஆங்காங்கே அடுப்பில் எரிக்க அண்டிகொட்டை  தோடுகள். அப்படியே திறந்த நிலையில் பண்டங்கள் தயாரிக்க பயன்படும் அடிப்படை பொருட்கள். ஆங்காங்கே சிதறிக்கிடந்த மிச்சங்கள். எலிகளுக்கு இரவில் உணவாக.
                             சுவர்களில் ஒட்டடை சித்திரங்கள் ஊசலாடி கொண்டிருந்தன. தயாரித்து முடித்தவற்றை ஈக்கள் ருசி பார்த்துகொண்டிருந்தன. எண்ணெய் சட்டியில், எத்தனையோ  கழிவுகள். 
                               என்ன செய்ய? 
                         தயாரிப்பிற்கு தடை விதித்தோம். தாங்களாக முன்வந்து பூட்டினார்கள். சிக்கலை தீர்பதற்கு,சீலும் வைத்து வந்தோம். 
                             கசப்பு  மருந்துதான் கொடுத்துதான் காய்ச்சல் தீரவேண்டுமென்றால், சுவையை பற்றி சிந்திக்கலாகாது. 
                               நாளும் தொடரும் இந்த நடவடிக்கைகள். 
                               நல்ல வேளை வர வேண்டுமென்ற நம்பிக்கையுடன். 


                            
Follow FOODNELLAI on Twitter

சிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.

                                 பொதுவாக பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள் பாக்கிங்  மீது தெரிவிக்க படவேண்டிய விபரங்கள் நிறைய உணவு கலப்பட தடை சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடபட்டுள்ளன. பல நேரங்களில், பல்துறை வித்தகர்கள், பல நாடுகளில்  வியாபாரம் செய்பவர்கள் என்று கூறும் மல்டி நேஷனல் கம்பெனிகள் கூட சருக்கிவிடுகின்றன. விளைவு:  
                                  உணவு பண்டங்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும்போது, குறைந்த பட்சம், கீழ்க்கண்ட விபரங்கள் அதில் அச்சிடபடவேண்டும்:
  1. உணவு பொருளின் பெயர்: 
  2. அதிலுள்ள மூல பொருட்களின் பெயர்கள்:
  3. தயாரிப்பாளரின் முழு முகவரி:
  4. எடை விபரம்:
  5. லாட் அல்லது பேட்ச் எண்:
  6. தயாரித்த அல்லது பாக்கிங் செய்த தேதி:
  7. எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது:
  8. சைவ / அசைவ வகை குறியீடு: 
  9. ISI தர சான்று பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது BIS விபரங்கள்:           
                    இவற்றை அவர்கள் அச்சிடுகிறார்களோ இல்லையோ, அட்லீஸ்ட் நாமாவது பார்த்து வாங்கலாமே! 


Follow FOODNELLAI on Twitter

Thursday, 26 August, 2010

தரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.

                          தமிழகம் முழுவதும் தடாலடி நடவடிக்கை. தரங்கெட்ட தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறதா என நாள் முழுதும் சோதனை. அங்கிங்கெனாதபடி, மாநிலம் முழுவதும் மாபெரும் சோதனை. அரசின் அதிரடியால்,  கலங்கல் குடிநீர் கொடுத்தோருக்கு   அடிவயிற்றில் கலக்கம். நாங்கள்  பேருந்து நிலையம் அருகே  ஒரு கிட்டங்கியை பார்வையிட்டபோது, கழிவு நீரோடை அருகே அடுக்கி வைக்கபட்டிருந்த அறுபத்தியொரு குடிநீர் பாக்கெட் மூடைகளை கண்டோம். அப்படியே அள்ளி வந்து அழித்துவிட்டோம். வழக்குகள் எல்லாம் இவர்களுக்கு வாழைப்பழம் போலும். அந்த மனிதரிடம் கேட்டேன்- "உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இந்த பாக்கெட்களை கொடுப்பீர்களா?"  என்று.  பஸ்ஸில் பயணிப்பவர் என்றால் படு இளப்பமோ? அடுத்த வீட்டு குழந்தைகள் அதை வாங்கித்தானே பருகுவர்! அவசர  கதியில், கடையில் அடுக்கி வைக்கபட்டிருப்பவற்றை அள்ளி செல்ல வேண்டாம். 
 
 
                               ஐ.எஸ்.ஐ. தர முத்திரை, தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, பாட்ச் எண் உள்ளிட்ட விபரங்களை நாம் ஒவ்வொரு பாக்கெட் செய்யப்பட்ட/ பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் பார்த்து வாங்க வேண்டும்.   அனைத்து கடைகளிலும் ஐ.எஸ்.ஐ. சான்றின் நகலையும் வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  
                                 காசு கொடுத்து கவலைகளை வாங்காதீர்!
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 25 August, 2010

தவித்த வாய்க்கு தண்ணீர்

                                   தவித்த வாய்க்கு  தண்ணீர் தருவது நம் தமிழர் மரபு. 
இன்றோ, தாகம் எடுக்கும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை 
 தாகம் தணிக்க     வாங்கி அருந்தும் குளிர்பான பாக்கெட்களிலும்
லாபம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு மனிதர்களின் உடல் நலத்தை
காவு வாங்க துடித்திடும்  கல் நெஞ்சகாரர்களின் கயமைத்தனம்.
                                            

 
 
                                       கண்ட கண்ட தண்ணீரில் தயாரிப்பதால்,  கடும் நோய்கள் வந்து தாக்கும். 
                               கவனம் மிக தேவை. பாக்கெட்டில் அடைத்த குளிர்பானம் என்றால்,என்று தயாரித்தது?, என்னென்ன பொருட்கள் சேர்கப்பட்டுள்ள தென நிச்சயம் பார்க்கவேண்டும்.  செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருந்தால், சாக்கரின் கலக்கபட்டிருந்தால் சத்தியமாய் சகல துன்பங்கள் தரும். தயங்காமல் தவிர்த்திடுவீர்.
                       இயற்கையாய் விளையும் இளநீரே இன்பம் தரும். 
                      செயற்கையை உண்டால் மிகுந்த துன்பம் வரும்.  
Follow FOODNELLAI on Twitter

Sunday, 22 August, 2010

திருநெல்வேலிக்கே அல்வா!

                                        அல்வா கொடுத்த அல்வாக்கடை.

                                  அன்றொரு நாள் அல்வாக்கடைக்கு சீல் வைத்தோம். ஆறாம் மாதம் அதுபற்றி (தின்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்)செய்தியும் தந்தேன்.  குடியிருக்கும் பகுதியிலே சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவித்ததால், ஆணையர்  எடுத்த அதிரடி நடவடிக்கை அது. அனைத்து ஊடகங்களிலும் அது பற்றிய செய்தியும் வந்தது. சுகாதாரத்தை பேணுகிறேன் என்றோ, குறைகளை நிறை செய்கிறேன் என்றோ எழுதிக்கொடுத்து, சீர்  செய்திருக்கலாம்.
                                   அப்படிச்செய்ய மனமில்லை போலும். அரசு வைத்த சீலை அவரே அப்புறப்படுத்தினார். வந்தது வில்லங்கம். வாசல்வரை சென்று விட்டோம். வழிநின்று சிலர்  தடுத்ததால், வந்து விட்டோம், வேறு வழியின்றி. 
பயமில்லை - பதுங்கித்தான் பாய வேண்டியிருந்தது.
                              


                        

                                 அரசு இயந்திரம், எவர்  இருந்தாலும், இல்லாவிட்டாலும் இயங்கிக்கொண்டுதான் இருக்குமென்பது என் கணிப்பு.
                                    அந்த நாளும் வந்தது. அதிரடியாய்ச் சென்றோம். அரசு வைத்த சீலை அப்புறப்படுத்திவிட்டு அங்கே கனஜோராய் களைகட்டிக்கொண்டிருந்தது--அல்வா தயாரிப்பு வேலை. அரசு சீல் வைத்து விட்டால், பிரச்சனை முடியும்வரை அந்தச் சொத்து அரசின் பொறுப்பிலிருக்கும். அரசு சொத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்திருந்தவர்களை வெளியே வரச்சொன்னால், கரண்டியும் கம்பும்தான் பறந்து வந்தது. பார்த்துக் கொண்டிருக்குமா காவல்துறை. அன்பாய் அவர்களைக் கவனித்து அருகில் நின்ற வாகனங்களில் ஏற்றினர்.
                                அரசிற்கே அல்வா கொடுக்க முயன்ற  அல்வாக்கடையை நன்றாய்ப் பூட்டி நான்கு புறமும் சீல் வைத்து நகர்ந்தோம் நாங்களுமே.
Follow FOODNELLAI on Twitter

Monday, 16 August, 2010

செல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.


                                              கழிப்பறைக் கதவின் கைப்பிடியில், பல நூறு பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். கழிப்பறைக்குச் சென்று வந்தபின் கைகளை நன்றாய் சோப்பு போட்டுக் கழுவுவதன் மூலம், பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பலாம். ஆனால், நாம் அண்மைக்காலமாக அதிகம் பயன்படுத்தும் செல்போன்களில், கழிப்பறைக் கதவின் கைபிடியில் உள்ளதுபோல், பல மடங்கு பாக்டீரியாக்கள் படிந்துள்ளன.

                                             சமீபத்தில், இலண்டனில் பயன்படுத்தப்படும் செல்போன்களிலுள்ள பாக்டீரியாக்கள் குறித்து, ஜிம் பிரான்ஸிஸ் என்ற சுகாதாரத்துறை நிபுணர் ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரத்தக்கவையாயிருந்தது. அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட ஆறு கோடி செல்போன்களில், சராசரியாக 25 சதவிகித செல்போன்களில், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
            
                                             பாக்டீரியாக்கள் இல்லாத இடமே இல்லை. எனினும், பாதுகாப்பான அளவென்று ஒன்று உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, பல செல்போன்களில், 18 முதல் 39 மடங்கு வரை பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி இருக்கின்றன. இது போதாதென்று. உணவை நஞ்சாக்கும் “இ-கோலி” மற்றும் “ஸ்டெபைலோகாக்கஸ்” போன்ற பாக்டீரியாக்கள் தற்போது செல்போன்களில் குடியிருக்கத் துவங்கிவிட்டன.
                                               ஜிம்மின் ஆராய்ச்சியில், சுவாரசியமான தகவலொன்று உண்டு. அவரின் ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்ட செல்போன்களில், அதிக அளவு பாக்டீரியாக்களை வைத்திருந்தவருக்குத் தீராத வயிற்று வலி இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின் உபயத்தால், அவருக்கு வயிற்றுவலி தீர்ந்ததோ இல்லையோ, பலருக்கு நோய் வரும் காரணம் செல்போனென்று தெரிந்து கொண்டோம் நாம்.

 
                                               செல்களைக் கழுவ முடியாது. கைகளை நன்றாய்க் கழுவுங்கள்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 11 August, 2010

பொள்ளாச்சி பக்கம் போனேன்.


           இந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் வேதநாயகம் கலையரங்கம் ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.
           இந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும் என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர்  திரு.சிவகுமார் பொதிகைக்கு என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், வாழ்க வளமுடன் என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர்  திரு.தண்டபாணி ஐயாஇன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர்  இயற்கை ர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி  நுகர்வோர்  குழு, கற்றறிந்த பெரியோர்  எனப்பலர்  வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.
           இறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர்.  பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: "அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது" என்பதையும் கூறுங்களென்றனர்..
எப்படிச் சொல்வது இதற்கோர்  பதிலை? இன்றளவும் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.

Follow FOODNELLAI on Twitter

Sunday, 8 August, 2010

உணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு

          
                              நம் முன்னோர்கள் உண்ணும் உணவிலும், உறங்கும் இடத்திலும் எண்ணிலடங்கா இயற்கை இரகசியங்களை உள்ளடக்கி வைத்துச்சென்றுள்ளனர். உதாரணமாக, நம் வீட்டுப் பெரியவர்கள், வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாதென்பர். புவி காந்த மண்டலத்தினால் நம் உடலிலுள்ள காந்த மண்டலத்திற்குப் பாதிப்பு ஏற்படும். நவீ மருத்தவம்வழக்கமாக வடக்கே தலை வைத்துப் படுப்பவர்களுக்கு ஹிஸ்டீரியா வரலாமென எச்சரிக்கிறது. இதை அன்றே உணர்ந்துதான் நம் முன்னோர்கள் வடக்கில் தலை வைத்துப்படுக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.
           அதே போல், நாம் உண்ணும் உணவு உடலுடன் சேர, காலையில் கஞ்சியும், நெய்யும் கலந்து அருந்தவும், ஏகாதசி அன்று மாதம் ஒரு நாள் பட்டினி கிடக்கவும், உண்ணும் உணவை வாழை இலையில் உண்ணவும் வற்புறுத்தியுள்ளனர். இவ்வாறு ஒவ்வொன்றிலும் உட்பொதிந்த பொருளொன்று உண்டென்றால் அது மிகையன்று.
           அன்று ஆன்றோர்  கூறிய அறிவுரைக்கெல்லாம், இன்று பல நாட்டோர் பகுத்தறிந்து சொன்னபின்னர்தான், ர்த்தம் புரிகிறது நமக்கு. அந்த வரிசையில், கிராம்பின் மருத்துவ குணங்களை நன்கறிந்த நம் முன்னோர் அதனை நம் உணவில் நன்றாய்ச் சேர்த்து வந்துள்ளனர். கிராம்பிலுள்ள பீனாலிக் கூட்டுப்பொருட்கள், உணவு பாழாவதைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக அண்மையில் மிகல் ஹெர்னன்டஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 
           உணவுப்பொருள் ஊசிப்போக, உணவிலுள்ள கொழுப்பும், காற்றிலுள்ள பிராணவாயுவும் கலப்பதால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களே காரணம். அத்தகைய வேதியியல்  மாற்றங்களால், உணவும் ஊசிப்போகும், தரமும் தாழ்ந்து போகும். அத்தகைய வேதியியல் மாற்றங்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கிராம்பிற்கு உள்ளது
           உணவுப்பொருள் பதப்படுத்தும் துறையில், இதுநாள்வரை வேதிப்பொருட்களை மட்டுமே பதனப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய வேதிப்பொருட்கள் உணவைப் பதப்படுத்துவதுடன், பக்க விளைவுகள் கொடுத்துப் பாடாய்ப்படுத்தும். இனி கிராம்பின் பக்கம் இவர்கள் கவனம் திரும்பும்.

Follow FOODNELLAI on Twitter

Sunday, 1 August, 2010

கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.

                                        கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள். 

                                 சைவ உணவே சத்தென்று சாப்பிடும் சமத்து  பிள்ளைகளா நீங்கள்! பச்சை பசேலென பசுமையாக, பாத்தவுடன் பட்டென்று எடுத்து கடித்துவிட தோன்றுகிறதா? கவனம்! கலப்படம் -காய்கறியிலும் கால் பதித்து விட்டதாம். 
                                   வாழை பழங்களையும், மாம்பழங்களையும் கந்தக கல் கொண்டு பழுக்க வைத்தனர். வந்து குவிந்த வசதியினால், காசு  பணம் பார்ப்பது மட்டுமே தம் கவலை என்று காய்கறியிலும் கலப்படத்தை புகுத்தியுள்ளனர். கவனம்! 
                                    சமீபத்தில், மத்திய மக்கள் நல்வாழ்வு துறை இணை அமைச்சர் திரு. தினேஷ் திரிவேதி, "ஆக்சிடோசின் " எனும் அருமருந்து அளவின்றி காய்கறி மற்றும் பழங்களில் பயன்படுத்தபடுவதாக பகிரங்கமாய் அறிவித்து தம் வேதனையை தெரிவித்துள்ளார். "ஆக்சிடோசின்", பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், நஞ்சுக்கொடி வெளியேற மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மருந்து. 

                                    பாகற்காய் ஜூஸ் பருகிய நபர் பட்டென்று போய்விட்டதாக செய்திகளில் காண்கிறோம். மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே விற்கப்பட வேண்டிய இந்த வில்லனை, பால் மாடு வளர்போரும், காய்கறி தோட்டம் வைத்திருபோரும்  கவலை ஏதுமின்றி வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர். 
                             பால் கறக்கும் மாட்டில் இதை பயன்படுத்தினால், அந்த ஹார்மோன், பசு தரும் பாலிலும் கலந்து, அதை அருந்தும் மனித உடலிலும் கலந்து, சிறுமிகள் விரைவில் பூப்பெய்திடவும், கர்ப்பிணிகள் கர்ப்பம் தொலைத்திடவும் காரணிகளாய் அமைகின்றன.   
                              "ஆக்சிடோசின் " மருந்து ஏற்றிய காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதால் இதய கோளாறுகள் இனிதே வந்து சேரும். நரம்புகள் பாதிப்பதால், மறதியும், மலட்டு தன்மையும்  மறக்காமல் வந்து சேரும்.
                                  அத்தகைய அருமருந்தை, காய்கறி செடிகளில் ஏற்றி, காய்கறிகள் மற்றும் பழங்கள் பச்சை பசேலென பழபழக்க பக்குவபடுத்துகின்றனர்.            
                                  மனிதா உன் பேராசைக்கு மரித்து விட்டதோ மனிதங்கள்!  உன் வீட்டிலும் ஒருவன் படுத்துவிட்டால்தான் அந்த வலி உனக்கு புரியுமென்றால், இறப்பதற்கு இங்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.

Follow FOODNELLAI on Twitter