இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 27 October, 2010

பாகும் பருப்பும் தேனும் தினை மாவும் -

பாகும் பருப்பும் 
தேனும் தினை மாவும் -இவை
நாலும்  கலந்துனக்கு 
நான்  தருவேன் . . . . . . . . "
                                பள்ளி செல்லும் குழந்தைகள் இறைவனை வணங்க சொல்லி கொடுக்கும் பாடல் இது. இந்த பாடலில் தேனை மேலும் மூன்று உணவு பொருட்களுடன்  சேர்த்து இறைவனுக்கு படைத்து, வழிபட்டு சங்க தமிழ் அறிவை கேட்கும் கோரிக்கை மனு. 

                                      தேனை, இறைவனை வழிபட மட்டுமல்ல, இன்னல் பல தீர்க்கும் அருமருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். ஆனால், இன்று நமக்கு கிடைக்கும் தேன், நோய் தீர்க்குமா?  நோய் கொண்டு தருமா? 
                                       தேனின் மருத்துவ குணங்கள் என்னென்ன? தேனில் கலப்படம் நடைபெறுவது எப்படி?  அந்த கலப்படத்தை கண்டு பிடிப்பது எப்படி? தேனின் மகத்துவம் குறைவதெப்படி? 
                                        தேனீக்கள், மலர்களின்  மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில்  தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன. தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது. 
                                                உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட  1.5 மில்லியன் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 40 சதம் ஆசியாவில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவைப்போல் வளரும் நாடுகளில் தனி நபர் ஒருவர் சராசரியாக 100 முதல்  200 கிராம்  தேனை உண்ணுகின்றனர். இது வளர்ச்சி அடைந்த நாடுகளில் சற்று அதிகம். 
                                                தேனில் இனிப்பு சத்து அதிகம். பிருக்டோஸ், க்ளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன. அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும். மற்ற ஆயுர்வேத மருந்துகளுடன் தேனை சேர்த்து உண்பதால், அந்த மருந்துகள் நம் உடம்பிலுள்ள செல் திசுக்களின் உள்ளே ஆழமாக ஊடுருவி பயன் தர தேன் உதவுகின்றது.
                                                 தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில், தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது. ஈரப்பதம் 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால், அது 'ஸ்பெஷல்'  கிரேடு   தேன் எனவும், 20 முதல்   22 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால், அது 'A' கிரேடு தேன் எனவும்,   22 முதல் 25 சதம் ஈரப்பதம்   இருந்தால் அது 'ஸ்டாண்டர்ட்"   கிரேடு எனவும் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன.   
                                      நம் இந்திய தேசம், ஒரு வருடத்தில் 65,000 டன் தேனை உற்பத்தி செய்து, சுமார் 25,000  டன் வரை ஏற்றுமதி செய்கிறது.தென்  மாநிலங்களில், தேன் தயாரிப்பிலும், ஏற்றுமதி செய்வதிலும், தமிழகம் தலை சிறந்து நிற்கிறது. கேரளமும், கர்நாடகாவும் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. வடமாநிலங்களில், காஷ்மீரில்தான் தேன் அதிகளவில் உற்பத்தியாகிறது. காடு வளமும், நாட்டுப்புறங்களில் பயிரிடப்படும் பூஞ்செடி, காய்கறிகளும்,நம் நாட்டின் சீதோஷன நிலையும் நல்ல தேன் உற்பத்திக்கு நமக்கு துணை புரிகின்றன.
                                                 தேனில் கலப்படம் என்றால், ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதும், இனிப்பு தன்மையை அதிகப்படுத்த சர்க்கரை பாகை கலப்பதும் தான்.  சர்க்கரை பாகு கலப்படத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம். நல்ல தேனை நாய் நக்காது என்பது பழமொழி. தேனை சிறிதளவு எடுத்து நாய் முன் ஊற்றினால், சுத்தமான தேனென்றால், அதனை நாய் நக்காது. சிறிதளவு சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டிருந்தாலும், நாய் அதனை ருசித்து உண்ணும். நாய் இல்லாத வீட்டில், நாயை தேடி ஓடவா முடியும். 
                                                    ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய  தண்ணீர் ஊற்றி, ஒரு கரண்டியில் தேனை எடுத்து, சிறிது சிறிதாக ஊற்றினால், நல்ல தேன் கம்பிபோல் நீரில் இறங்கும்.  சர்க்கரை பாகு கலப்படம் செய்யபட்டிருந்தால், அது நீரில் கரையும்.

                                                  இதையெல்லாம் தூக்கி சாப்பிட, தேனில்  இப்போது ஒரு கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான், தேனில் காணப்படும் ஆண்டிபயொடிக்ஸ்.தேனீக்களுக்கு ஏற்படும் நுண்ணுயிரி மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து  தப்பிக்க  டெராமைசின், சல்போனாமையிட்,டெட்ரா சைக்ளின், க்ளோரோம்பனிகால், எரித்ரோமைசின் போன்ற எதிருயிரி (Anti-biotic) மருந்துகள் அதிகளவில்,எந்தவித கட்டுபாடுகளும் இன்றி பயன்படுத்தப்படுகின்றன.


                                    விளைவு, தொடர்ந்து  எதிருயிரி மருந்து கலந்த தேனை உண்பதால், தீவிர உடல் நல கோளாறுகள் ஏற்படும். இத்தகைய மருந்து படிவங்கள், ஏற்றுமதி செய்யப்படும் தேனில் இருப்பதை விட, உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனில் இருபத்தைந்து மடங்கு அதிகம் இருப்பதுதான், அண்மைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல். 
                                                 சரி, மருந்தின் படிவங்கள் கலந்த தேன் உண்பதால் என்ன பிரச்சனைகள் வரும் ? குறைந்த அளவில் உள்ள சில மருந்துகள், தோலில் அரிப்பு, அஜீரண கோளாறுகள்  ஏற்படுத்தும். அதுவே, அளவுக்கு அதிகமானால், அந்த கிருமிகளுக்கு எதிர்ப்பு  சக்தி கொடுத்து, மனிதன் பாதிக்கும்போது, மருந்தே இல்லை என்ற நிலை உருவாகும். 
                                                 நாம் கலப்படமான தேனை குழந்தைகள் உடல் நலம்  காக்க அளித்தது  போக, அந்த தேனே குழந்தைகள் பற்களில் கரை படிய காரணமாகிவிடும். 
                                                  தேனின் தரத்தை EU, CODEX ALIMENTARIUS & FDA  போன்ற அமைப்புகள் எப்படி அயல்நாடுகளில் நிர்ணயம் செய்துள்ளதோ, அதே நடைமுறை இந்தியாவிலும் அமல்படுத்தப்படும் என்று அண்மையில் இந்தியாவின், உணவு பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணய அமைப்பு (FSSAI)அறிவித்துள்ளது, நம் அனைவர் நெஞ்ச்சிலும் ( தேன்) பால் வார்க்கும் செய்தியாகும். 
Follow FOODNELLAI on Twitter

Saturday 23 October, 2010

உலக உணவு நாள் உரை.

                        உலக உணவு நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக வியாழன் மாலை,  பாளை I.I.P.E கணினி மைய  வளாகத்தில்  விழா.
                                   நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு. அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  உணவு பொருட்களில்  ஒவ்வொரு நாளும் பெருகி வரும் கலப்படங்கள் எவை? அவற்றை கண்டுபிடிப்பது  எப்படி? கலப்படத்தால் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் எவை என எடுத்துரைத்தேன்.


                                   இனிய மாலை பொழுது இனிமையாய் கழிந்தது.  இறுதிவரை என் முன் வைத்த டீயை மட்டும் நான் அருந்தவேயில்லை.  ஏனெனில், அந்த டீ வைக்கப்பட்ட கப் அப்படிப்பட்டது. பிளாஸ்டிக் கப்பில் டீ வந்ததால், நானும் அருந்தவில்லை. அந்த கூடத்திற்கு வந்த நண்பர் ஒருவரும் அதனை நாசூக்காய் தவிர்த்து விட்டார். பிளாஸ்டிக் ஒழிப்பதென ஊர் முழுவதும் பிரச்சாரம், கேட்காத கடைகரர்களுக்கு அபராதம். நான் மட்டும் அதே பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்தலாமா? அதனால் தவிர்த்துவிட்டேன். பிளாஸ்டிக் கப்பில் டீ என்றால் அருந்துவதில்லை. பிழையாக எண்ண வேண்டாம்  என்று கூறி, வேண்டுகோள் ஒன்றும் விடுத்து வந்தேன்.  இனி நடைபெறும் கூட்டங்களில் இயற்கைக்கு இன்னல் விளைவிக்காத பேப்பர் கப்புகளை பயன்படுத்த வேண்டினேன். நல்ல காரியம் என்பதால் நிச்சயம் நடத்தப்படுமென்றோர் உறுதிமொழியும் அளித்தனர். 
                              நாம் ஒவ்வொருவரும் , பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதில்லை என்றோர் நிலைப்பாடு எடுத்தால், நாளை உலகம் நம்மை போற்றும். நாளை நம் சந்ததி உண்ண நல்ல உணவும் கிடைக்கும்,  நா வறட்சி தீர்க்க நல்ல நீரும் கிடைக்கும்   என்ற நம்பிக்கைகளோடு - நன்றி.    
Follow FOODNELLAI on Twitter

Wednesday 20 October, 2010

கொசு -கடிக்கும் ஆனால் கடி(வலி)க்காது.

                                    மரபணு  மாற்றம் கொசுக்களிலும் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மைய  இயக்குனர் திரு. பி.கே.தியாகி, மரபணு மாற்றம் கொசுக்களிலும் கொண்டு வரப்படுவதாக கூறியுள்ளார்.
 
                                    "ஈடீஸ் ஈஜிப்டி"  - இன்று உலகளவில் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு  இவள்தான்  ஹீரோயினி.(சாரி, ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை)   வாழ்நாள் இவளுக்கு   மாதம் ஒன்று  மட்டுமே. 

                                     வரிபுலிபோல் உடம்பெல்லாம் வரிசையாய் கோடுகள் இருக்கும். கேள்விக்குறிபோல்  உடல்  வளைந்திருக்கும்.  வாழும் நாட்களில் கண்ணில் கண்டவரையெல்லாம் கடித்து துன்புறுத்துவதில் இவளுக்கு இணை எவருமில்லை. கடி என்றால்  சாதாரண கடியல்ல. மனித உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சுவது இவளுக்கு பொழுதுபோக்கு. பொழுதுபோக்காய் இரத்தத்தை உறிஞ்ச இவளது  சிரிஞ்சை நுழைக்கும்போது, இவள்   உடலில் உள்ள  டெங்கு வைரஸை மனித உடலில் இலவச டெலிவரி  கொடுப்பது இவளது வாடிக்கை.

                                         ஆண்  கொசுக்களின் டி. என். ஏ.வில், மரபணு மாற்றம் செய்து, அவை பெண் கொசுக்களுடன் சேரும் வகையில் பறக்கவிடப்படும்.  அவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களின் இனபெருக்கம் மூலம் பிறக்கும் புதிய சந்ததி வலிமை இன்றியும், கடிக்கும் தன்மை குறைந்தும் காணப்படும். மலேசியாவில் மரபணு மாற்றம் செய்த கொசுக்கள் சிறகடிக்க தொடங்கிவிட்டன. வெகு சீக்கிரம் இந்தியாவிலும் இது சிறகடிக்கும்.  

                                      
Follow FOODNELLAI on Twitter

Friday 15 October, 2010

அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு அற்புத விழா.

                                           அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு அற்புத விழா. நண்பர்                அரசகுமாரும்   நானும் சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டோம். திருநெல்வேலி, அரசு பொறியியல் கல்லூரியின் நுகர்வோர் அமைப்பு (CCC) வியாழனன்று மாலை நடாதிட்ட விறு விறு நிகழ்ச்சி. 

                                        கல்லூரி நாட்களின் கனவுகளை நினைவுபடுத்தி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளின் பின் விளைவுகளை விளக்கினார், அரசகுமார்.
                            கல்லூரி முதல்வர் திரு.கணேசன் தலைமை உரையாற்றினார்.
                                  நாளைய கனவுகளுடன் கல்லூரி மாணவர்கள்.

    உணவில் கலப்படம் உயிரை குடித்திடும் விதம் குறித்து எனது உரை அமைந்தது.
                                 நான்கு ஜோடி மாணவியர், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படபோகும் இன்னல்களை  எடுத்துரைத்தனர்.  நல்ல பல கருத்துக்களை நறுக்கென்று தெரிவித்தனர்.
                                       
                                  கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வந்தோம்.  
                                  ஆங்கிலத்தில் புலமை அவசியம் வேண்டுமென்று நினைத்தனர் போலும்.  விளக்கவுரை முழுவதும் வந்து விழுந்தது ஆங்கிலத்தில். எங்கள் உரை செம்மொழியாம் தமிழ் மொழியிலேயே அமைந்தது.
                                    நல்ல நிகழ்ச்சி, நல்ல முயற்சி.      
                                    நன்றாய் மாணவர்கள் பயன்பெற வழி வகுத்திட்ட                  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.சுபா  அவர்களுக்கு பாராட்டுகள்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 13 October, 2010

புற்று நோய்க்கு புது மருந்து.

                     புற்று நோய்க்கு புது மருந்தொன்று ,இலவசமாய் வழங்கபடுகிறதாம். எனது மெயில் பாக்சை திறக்கும்போதெல்லாம்,  வந்து விழுகின்றன புதிது புதிதாய் இ- மெயில்கள் - வியாழகிழமை உலக புற்று நோய் தினமென்று. என்னதான் இருக்கிறதென்று பல வலை பக்கங்களை வலம் வந்து பார்த்தால், பெப்ரவரி- 4 ,   உலக புற்று நோய் தினமென்று கண்டேன். இருந்தும் என்ன! மெயிலில் வந்த தகவல் பயனுள்ளது என்பதால் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். 
                    இரத்த புற்று நோய்க்கு 'Imitinef Mercilet' என்றொரு மருந்து இலவசமாய் அடையார் புற்று நோய் மருத்துவமனையில் வழங்கபடுகிறதாம். அது இரத்த புற்று நோயை சுத்தமாய் துடைத்திடுதாம். 1954 இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில், அனைத்து புற்று நோய்களுக்கும் நல் மருத்துவ சிகிச்சைகள் வழங்கபடுகிறதாம்.புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. இரத்த புற்று அதில் ஒரு வகை. 
                               அடையாறு மட்டுமல்ல, மேலும் பல மருத்துவமனைகளிலும் மேற்கண்ட மருந்து இலவசமாய் வழங்கப்படுகிறதாம்.  மருத்துவமனைகளிலே தங்கி சிகிச்சை எடுப்பவர்களுக்கு  மட்டுமே இந்த மருந்து வழங்கப்படுகிறதாம்.
                                நான் அறிந்தவரை, எந்த ஒரு புற்று நோய்க்கும், தனி ஒரு மருந்தில் முழு நிவாரணம் கிடைக்கும் என்று உறுதிபட கூற இயலாது.  புதிய மருந்தென்பதால், இனிதாய் சுகபடுத்தட்டும். இறைவனை வேண்டுவோம், இன்னல்கள் தீர. 
                               புகை இல்லா புகையிலை பயன்பாடு அதிகரித்து வருவது ஆபத்துகள்   பலவற்றை அழைத்து வரும். தவிர்ப்போம் புகையிலை பயன்பாடு.  
Follow FOODNELLAI on Twitter

Tuesday 12 October, 2010

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சீரிய முன்னேற்றங்கள்.

                                சிறுநீரக அறுவை சிகிச்சையில் சீரிய முன்னேற்றம். 


            சிறுதுளை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியுமென இலண்டன், ஹேமர்ஸ்மித் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரிர் திரு.நேடி ஹக்கீம், தாமே வடிவமைத்த ஒரு தொழில் நுட்பம் மூலம் சாத்தியமென நிரூபித்துள்ளார். சாதாரணமாக 10 முதல் 15 செ.மீ. அளவில் வயிற்றில் துளையிடப்பட்டு நடத்தப்படும் அறுவை சிகிச்சை முறைகளுக்கு மத்தியில் பேராசிரிர் ஹக்கீம் 2.5 செ.மீ. அளவில் துளையிட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யமுடியுமென நிரூபித்துள்ளது, ஆயிரக்கணக்கில் மாற்று அறுவை சிகிச்சைக்கென காத்திருப்போர் நெஞ்சங்களில் பாலை வார்த்துள்ளது. 
                                                
        ஏனெனில், சிறுநீரகம் தானமாக அளிப்பவர்கள், அவர்தம் உடலில் பெரிதாய் ஏற்படும் தளும்பைக்கண்டு அஞ்சுவதுண்டு. உடலில் ஏற்படும் தளும்பைவிட, சாதாரண அறுவை சிகிச்சை முறையில் பெரிய  அளவில் உடலில் துளையிடப்படுவதால், தானம் அளிப்பவர்களுக்கு ஹெர்னியா போன்ற  கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மற்ற அறுவை சிகிச்சைகளில், நோயாளிகள் உடம்பில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரக அறுவை சிகிச்சையிலோ, நோயாளிக்குத் தேவைப்படும் சிறுநீரகம் பல நேரங்களில் உடல் நலமுள்ள உறவினர்களிடமிருந்தே பெறப்படுகின்றன.
        திரு.ஹக்கீம் வடிவமைத்துள்ள சிகிச்சை  முறையில், 2.5செ.மீ. அளவில் மட்டுமே வயிற்றுப்பாகத்தில் துளையிடப்படுவதால், இரத்தம் அதிக அளவில் வீணாவதில்லை. அந்த துளையின் வழியே,சிறிது வளைந்த அறுவை சிகிச்சை கருவியை உள்நுழைத்து சிறுநீரகங்களுககுச் செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகக் குழாயில் கிளிப் செய்வது, சிறுநீரகத்திற்கான இரத்த ஓட்டத்தினை தடை செய்வதால், சிறுநீரகம் பஞ்சுபோல் மாறுகிறது. பின்ன
ர், அதனை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி  விரல் உதவியுடன் சிறுதுளை வழியே அப்புறப்படுத்துகின்றனர். இதனால், இந்த முறையில் கால விரயம், இரத்த விரயம்,பண விரயம், பெரிய  அளவிலான அறுவை சிகிச்சை தளும்புகள் தவிர்க்கப்படுகின்றன.  

                            500க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை இம்முறையில் செய்து வெற்றி பெற்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நலமடைந்து வீடு திரும்புவது மேலும் பலரை திரு.ஹக்கீமை வாழ்த்த வைக்கும்.
Follow FOODNELLAI on Twitter

Friday 8 October, 2010

தமிழகத்திலும் உணவு ஆய்வாளர்களுக்கு முழு நேர பணி.

அன்பு உணவு ஆய்வாளர் நண்பர்களே, 
                                                                       நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உணவு பாதுகாப்பு சட்டம்   விரைவில் அமலாக  போகிறது. தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும், சுகாதார பணிகளுடன், உணவு கலப்பட தடை சட்டத்தை அமலாக்கும் பணியையும் சேர்த்தே பார்த்து வருகிறோம். அண்டை மாநிலங்களில், உணவு ஆய்வாளர்கள், உணவு கலப்பட தடை சட்ட அமலாக்கம் மட்டுமே பார்த்து வருகின்றனர்.
                                                                        அனைவருக்கும் சந்தோஷ செய்தி ஒன்று உண்டு. சென்னை, பொதுசுகாதார துறை இயக்குனர் அவர்கள், சுற்றறிக்கை எண். 114114-உகதச-இரு-1-2010 நாள் 05.10.10 இல் , உணவு ஆய்வாளர்கள் அவர் தம் பணியை முழுமையாக செய்ய, முழு நேர உணவு ஆய்வாளர் பணியை மட்டுமே செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். 
                                                            
Follow FOODNELLAI on Twitter

தினசரிகளில் திக் திக் செய்திகள்.
Follow FOODNELLAI on Twitter