இரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை. அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விடுத்திருந்தோம். என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார். நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.
முதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
முதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.
ஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும் வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம்.
தொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும்.
இதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -
இனி செய்முறை விளக்கம் பார்ப்போம்.
கலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள் மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும். |
சுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,
நிறங்கள் விரைவில் பரவாது.
நண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்:
http://foodsafetynews.wordpress.com/2010/11/24
