நேற்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில்
சென்னையிலிருந்து நெல்லைக்கு பயணம். எனக்கு ஒரு கோச்சில் கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
எப்போதாவது கீழ் இருக்கை கிடைக்கும். தப்பித்தவறி கிடைக்கும்போதும், அதில் நாம் பயணம்
செய்யமுடியாமல், வயதானவரோ, கர்ப்பிணிப்பெண்ணோ, கைக்குழந்தையுடன் வரும் தாயாகவோ வருபவருக்கு
மேல் இருக்கை கிடைத்திருக்கும். அதை நாம் பெற்றுக்கொண்டு, கீழ் இருக்கையை அவர்களுக்கு
விட்டுத்தருவது வாடிக்கை.
நேற்றும்,
அப்படித்தான்! எனக்கும், என்னை விட வயதில் இளைஞரான எதிர் இருக்கை சகோதரருக்கும் கீழ்
இருக்கை. மற்ற ஆறு பெர்த்களும், ஒரு குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த
குடும்பமும் வந்தது. வயதான தம்பதியர், 45 வயது மதிக்கத்தக்க ஒரு தாய், தகப்பன்(கதை
நாயகன் –கண்ணாயிரம்), அவர்களின் மூன்று பெண் குழந்தைகள். பெரிய பெண் 6 மாத கைக்குழந்தையுடன்
வந்திருந்தார். பக்கவாட்டு கீழ் இருக்கையும் இன்னொரு 50 வயது பெண்ணிற்கு, மதுரைவரை
ஒதுக்கப்பட்டிருந்தது.
பாவம் அந்த வயதான தம்பதியரை, இரண்டு பே
தள்ளி கிடைத்திருந்த இரு மேல் பெர்த்திற்கு கண்ணாயிரம் அனுப்பி வைத்தார் அந்த 45 வயது
இளைஞர்(!).கண்ணாயிரத்தின் மாமனாரும், மாமியாருமாம் அவர்கள். கண்ணாயிரம், என்னிடமும்,
எதிரிலிருந்த நண்பரிடமும் கீழ் இருக்கைகள் எங்களுக்கு வேண்டுமென்றார். குழந்தை இருக்கிறதே
என்று, சரி என்றோம்.
சாப்பாட்டுக் கடனை முடிப்பதற்குள் நாற்பது
தடவையாவது, இந்த சீட் இவருக்கு, அந்த சீட் அவருக்கு, நீ அதில படு, அந்த பெண் மிடில்
பெர்த், இந்தப் பெண் அப்பர் பெர்த், நான் சைடு அப்பர் பெர்த் என்று பலமுறை மாற்றி மாற்றி
சொல்லிக்கொண்டிருந்தார். அவரைச் சமாளிக்க அந்த வீட்டு அம்மிணி அநேக பொறுமையுடன் இருக்க
வேண்டுமென எண்ணிக்கொண்டேன். சாப்பிட்டு முடித்ததும், அவரது மாமனாரை அழைத்து வந்து,
இங்கிருந்த அப்பர் பெர்த்தில் ஏறுங்கள் என்றார். அவரும் அப்பாவியாய் அதில் ஏறி படுத்தார்.
அங்கு வந்த டிக்கர் பரிசோதகரிடம் வயதான இருவருக்கும் கீழ் இருக்கை கிடைத்தால் கொடுங்கள்
என்றார். ஆகட்டும் பார்க்கிறேன் என்று சொல்லி சென்றார்.
அடுத்த பத்தாவது நிமிடம், அங்கு வந்தவர்,
மேல் பெர்த்தில் படுத்திருந்த பெரியவரை எழுப்பி, அடுத்த பேயிலுள்ள அப்பர் பெர்த்திற்கு
மறுபடியும் போகச்சொன்னார். பாவம் அந்த முதியவர்! பெண் கொடுத்த புண்ணியத்திற்காக இறங்கி
அங்கு போய் படுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில், அங்கு வந்த டிக்கட் பரிசோதகர், முதியவர்கள்
இருவருக்கும் கீழ் இருக்கை கொடுப்பதற்காக, நம்ம கதை நாயகன் கண்ணாயிரத்தை தேடினார்.
அவர் கதவருகில் நின்றுகொண்டு, அலைபேசியில் அளவளாவிக்கொண்டிருந்தார். இரவு மணி பத்தைத்
தாண்டியிருந்தது.
அவரைத்தேடிச் சென்ற அவர் மனைவி அடுத்த ஐந்து நிமிடத்தில்,
தலைவிரி கோலமாய் பெருங்குரலில் அழுதுகொண்டே அங்கு வந்து, தம் மகள்களிடம், இவர் எனக்கு
வேண்டாம், என்னை எல்லோர் முன்னிலையிலும் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு என் மூஞ்சியில்
அடித்துவிட்டார் என்று கதறி அழுதவண்ணமிருந்தார். நாங்களெல்லாம் அப்போதுதான் அவரவர்
பெர்த்தில் ஏறி படுத்த நேரமது. சற்று நேரத்தில் அங்கு வந்த கண்ணாயிரம், சுற்றி பலபேர்
இருக்கிறார்களே என்று கூட யோசிக்காமல், ஓங்கி அவர் மனைவியை அடிக்கவும், அவர் பெருங்குரலெடுத்து
அழவும், நான் பெர்த்திலிருந்து இறங்கி, ஏங்க உங்க சண்டையெல்லாம் வீட்ல வச்சுக்கக் கூடாதா?
நாங்களெல்லாம் நிம்மதியா தூங்க வேண்டாமா என தட்டிக்கேட்டதுதான் தாமதம், என் பொண்டாட்டியை
அடிக்கக்கூடாதுன்னு தடுக்க நீ யாருன்னு அந்த அம்பு என்னை நோக்கி பாயத்துவங்கியது.
இது சரிப்படாது என்று எண்ணிவிட்டு, அந்த ரயிலில்
பயணம் செய்த காவல்துறையின் உதவியை நாடினேன். நான்கு பெட்டிகள் தள்ளியிருந்த காவல்துறையினரை
அழைத்து வருவதற்குள், எங்கள் பெர்த்தில் இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று
பார்த்தால், அடுத்த பக்கத்திலிருந்த நபர் ஒருவர், என்னைப்போலவே, அவரிடம் சென்று நியாயம்
கேட்டுள்ளார். பதிலாக அவருக்கு கிடைத்ததென்னவோ ஒரு பளார்தான்! இத்தனைக்கும் நம்ம கண்ணாயிரத்திற்கு,
காற்றில் பறந்து செல்லத்தக்க உருவம்தான். எதிர் பார்ட்டியோ, என்னைவிட பெரிய தேகம்.
வந்த காவல்துறை தலைமைக்காவலர் தன்பாணியில் விசாரணையைத்
தொடங்கினார். அப்பத்தான் தெரிந்தது, கண்ணாயிரம் கண்ணை மறைத்தது உள்ளே சென்ற உற்சாக
பானமென்று. காவல்துறை நண்பரின் உள்ளங்கை, கண்ணாயிரத்தின் கன்னங்களை உறவாடி வந்தபின்தான்,
அவருக்கு நிதர்சனம் புரியத்தொடங்கியது. நல்ல துறையில் பொறியியல் பிரிவில் பணியிலிருக்கிறாராம்.
வகையாக வசைமாறி பொழிந்து, கண்ணாயிரத்தின் மாமனார் இருந்த மேல் இருக்கையில் சென்று படுக்க
வைத்தார். காவலர் தலை மறைந்ததும், மீண்டும் இங்கு வந்த கண்ணாயிரம் அவரிடமிருந்த பர்ஸ்,
ஐடி கார்ட் போன்றவற்றை அவர் மனைவியிடம் தூக்கி எறிந்துவிட்டு, என்னை காவலர் அடிக்குமளவுக்கு
கேவலப்படுத்திட்டீக, நான் என்ன பண்றேன் பாருன்னு மிரட்டிட்டு போனார்.
இரவு மணி 11.30 இருக்கும். நம்ம கதாநாயகன் கண்ணாயிரம்,
அவர் மகள் அலைபேசிக்கு “இனி உங்கள் தந்தையை எங்கும் பார்க்க முடியாது. வருகிறேன்” என்று
வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். பதறிய அவர் மகள், அம்மா, அம்மா அப்பாவை அவர் இருக்கையில்
காணவில்லை. ரயில் வேறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னதுதான் தாமதம், கண்ணாயிரம்
மனைவி ஆமாடி கொஞ்ச நேரத்துக்கு முன்ன டமார்னு ஒரு சத்தம் கூட கேட்டதுன்னு சொல்லி அவரும்
அழ ஆரம்பிக்க, எங்களுக்கெல்லாம் ஏழரை எதிரில் வந்து அமர்ந்து கொண்டான். அவர் செல்லிற்கு
அழைத்தால், தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதாக பதில் வந்தது. அம்மா, அப்பா நம்ம மேல
கோபப்பட்டுக்கிட்டு தவறான முடிவெடுத்திட்டாரம்மா என்று அடுத்த மகளும் சேர்ந்து அழ,
ரண களமாகிவிட்டது.
அவரசப்படாதீர்கள், அவரைப்பார்த்தால் அப்படி
அவசர முடிவெடுப்பவராகத் தெரியவில்லை. தொடர்ந்து அவர் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். சற்று
முன்பு ஒரு ஸ்டேசனில் எதிர் வரும் வண்டிக்காக, நாம் செல்லும் இந்த ரயில் நிறுத்திவைக்கப்பட்டபோது,
கோபத்தில் இறங்கியிருக்கலாம் என்று சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பாவை
இனிமே பார்க்கவே முடியாதாம்மா? என இரு குழந்தைகளும் கதறி அழ, சற்று நேரத்தில் அவர்
அலைபேசிக்கு அழைப்பு சென்றது. பின் நின்றது. ஆக, அவர் கோபத்தில்தான் இருக்கார். வேறொன்றுமில்லை,
ஓய்வெடுங்கள் என்று சொன்னேன். ஒருவேளை அவர் ரயிலிலிருந்து இறங்கி இருக்கலாம். அல்லது
இந்த ரயிலிலேயே எங்காவது ஓர் மூலையில் முடங்கியிருக்கலாம் என்று நான் சொன்ன சமாதானங்கள்
எடுபடவில்லை. முழு இரவும் நானும் தூக்கம் தொலைத்தேன்.
சற்றே
கண் அசந்திருப்பேன். மீண்டும் கீழிருந்து பயங்கர அழுகைச்சத்தம். என்னவென்று பார்த்தால்,
எங்க அப்பா, எங்க அப்பா என்று கண்ணாயிரத்தின் மகள்களும், மனைவியும் சேர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்போறோம். நாங்களும் அடுத்து வரும் ஸ்டேசனில்
வண்டியிலிருந்து இறங்கப்போறோம் என்று சொன்னார்கள். கொஞ்சம் பொறுங்கம்மா, பொழுது விடியட்டும்,
வெளியில் மழை வேறு பெய்து கொண்டிருக்கு, அவரை முதலில் ரயிலில் தேடிவிட்டு முடிவெடுக்கலாமென்று
சொல்லியும், தொடர்ந்து புலம்பிய வண்ணம் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். மற்றவர்களுக்கும்
நேற்று சிவராத்திரிதான். விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம், காவல்துறையிடம் புகார் செய்ய,
அவ்ர்கள் ரயில் முழுவது தேடியும், முன்பதிவு பயணப்பெட்டிகளில் அவரில்லை. எதற்கும் பார்க்கலாமென்று,
முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறித்தேடினால், கண்ணாயிரம் அங்குதான் காற்று வாங்கிக்கொண்டிருந்தாராம்.
அட்வைஸ் செய்து அழைத்து வந்து, குடும்பத்தினரிடம்
விட்டுச்சென்றனர் காவல்துறையினர். திகில் இரவுக்காட்சிகள் தித்திப்பாய் நிறைவு பெற்றன.

8 comments:
கண்ணாயிரம் தொல்லை பெரும் தொல்லை.....
கண்ணாயிரம் தொல்லை பெரும் தொல்லை.....
கண்ணாயிரம் கடைசியில் காணக் கிடைத்ததில் சந்தோஷமே..... மதுவின் தீமைக்கு அவரை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது சம்பந்தமேயில்லாத நாமும் துயரப்பட வேண்டியிருக்கிறது.
ivan kooda ellam vazhanuma?
andha sakothari oru nalla mudivai edukkanum?
பொது இடத்திலும் இப்படி நடந்துகொள்ளும் இவர்களுக்கு தண்டனைதான் சரி! அட்வைஸ் எல்லாம் சரிப்படாது. பாவம் அந்த பெண்மணி!
கண்ணாயி.....ரம்
பாவம் அந்தாளு ..ஐ சப்போர்ட் கண்ணாயிரம் அண்ணா ..ஒரு குடிமகனை அடிச்சி துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆக்கிருக்கிங்க வன்மையான கண்டனங்கள்
கண்ணாயிரத்துக்கு தூக்கம் வரலைன்னா ஒருத்தரையும் தூங்க விடப்டாது ஹா ஹா ஹா ஹா...
ஏன் ஆபீசர் நீங்களே முதல்ல அவனை அப்பிருக்கலாம்தானே ?
Post a Comment