இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 13 January, 2015

விருதுநகர் மாவட்டத்தில் விறு விறு விழிப்புணர்வு பணிகள்

                   
            சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக டெங்குக்காய்ச்சல் கண்டு, பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை பல போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு, டெங்குக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
         
  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சுகாதாரத்துறையினர், மருத்துவத்துறையினர், உணவு பாதுகாப்புத்துறையினர், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் விருதுநகர் மாவட்டத்தில் முகாமிட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சிறப்பு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது.

              அதிகாலை நண்பர் சிங்கராஜுடன் விருதுநகர் எம். ஜி.ஆர் சிலையருகே பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது, பஸ்சுக்காக காத்திருந்தஅனைவருக்கும் கேட்டு,கேட்டு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். கடமையாக அதை செய்யாமல் கண்ணும் கருத்துமாய் விருதுநகர் நகராட்சி ஓட்டுனர் திரு.மொட்டையசாமி செய்து கொண்டிருந்தார்.பாராட்டணும் அவர் பணியை.
                  திங்களன்று அப்பகுதிக்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். இரு குழுக்களாக நாங்கள் பிரிந்து சென்றோம். எங்கள் குழு, ரயில்வே ஃபீடர் ரோட்டிலுள்ள உணவு நிறுவனங்கள், கல்விச்சாலைகள், அரிசி ஆலைகள், மாணவர் விடுதிகள் என முக்கியமான இடங்களில் ஆய்வு செய்ய, மாவட்ட நியமன அலுவலர் தலைமையில்  சென்றது.
                         முதலில் சென்றது ஒரு டீக்கடை. கடையின் உள்ளேயிருந்த தண்ணீர் டிரம்மை எட்டிப்பார்த்தோம். அத்தனை புழுக்கள் அதில் நெளிந்துகொண்டிருந்தன. அப்படியே அந்த நீரை கொட்டிவிட வைத்தோம்.

டெங்கு காய்ச்சலைப்பரப்பும் “ஏடிஸ்” கொசுக்கள் நல்ல தண்ணீரில்தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனையும், அவை பகலில்தான் ஆட்களைக்கடிக்கும் என்ற விபரத்தினையும் அவருக்கு எடுத்துரைத்தோம். இனி கவனமாயிருப்பதாய் உறுதியளித்தார்.

                            அடுத்து சென்ற இடம்- தொடக்கப்பள்ளியில் பயிலும் பின் தங்கிய சமூகத்தைச் சார்ந்த மாணவிகள் தங்கும்விடுதி. அங்கிருந்த உயர்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் குடிநீர் இருந்த பாத்திரங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தோம். குடிநீர்த்தொட்டிகள் முறையாகப்பராமரிக்கப்பட்டிருந்தது கண்டு பாராட்டி வந்தோம். பள்ளி செல்லும் முன் மாணவிகளுக்கு, டெங்கு காய்ச்சல்,அதன் அறிகுறிகள், அதற்குக் காரணமான வைரஸ், ஒரு மனிதரிலிருந்து மற்றொருவருக்கு அந்த வைரஸை பரப்பும் ஏடிஸ் கொசு பற்றி ஒரு பத்து நிமிடம் எடுத்துச் சொல்ல கேட்டுக்கொண்டோம்.
                          அங்கிருந்து நாங்கள் அருகிலிருந்த அரிசி ஆலை ஒன்றிற்கு ஆய்வுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்கள் மனங்களைப் பதற வைத்தது. ஆம், அந்த மாடர்ன் ரைஸ்மில்லில், நெல் அவிப்பதற்காக ஒவ்வொன்றும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள நான்கு தொட்டிகள் கட்டி அதில் நீரை நிரப்பி வைத்திருந்தனர். அந்த தொட்டிகளிலிருந்த நீரில் ஆயிரக்கணக்கான கொசுப்புழுக்கள் ஆடி ஓடிக்கொண்டிருந்தன. இவைதான் இந்த ஊருக்கே கொசுக்களை அனுப்பும் கொடிய இடமென்று எடுத்துச்சொல்லி, அந்த நீரை உடனடியாக அப்புறப்படுத்த வைத்தோம்.
                               டெங்குவைப்பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அதற்கான காலம் 7 நாட்களென்பதால், தொட்டிகளில் நீர் தேக்கி வைத்தால், அவற்றை ஆறு நாட்களுக்குள் காலி செய்துவிடவேண்டுமென்றும், அவை காலியான உடன் தொட்டிகளை நன்றாக வெயிலில் காயவிடவேண்டுமென்றும் அறிவுறுத்திவந்தோம்.

                                  அருகிலிருந்த திரையரங்கம் ஒன்றையும் ஆய்வு செய்து, அங்கிருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, குளிர்சாதனப்பெட்டி போன்றவறை  பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கிவந்தோம்.

                              டாஸ்மாக் கடையும் எங்கள் ஆய்வில் தப்பவில்லை. டாஸ்மாக் கடையின்  அருகிலிருந்த பாரில், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை ஏராளமாகக் குவிந்து கிடந்தன. அவற்றில் சிறிது நல்ல நீர் தேங்கினாலும் அவை ஏடிஸ் கொசுக்களின் கூடாரமாகிவிடுமென்பதை எடுத்துச்சொல்லி, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வைத்தோம்.
                             அந்தப் பகுதியிலிருந்த அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து, பள்ளிகளின் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை திறந்து பார்த்து, அவற்றில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்று சோதனையிட்டோம். முறையாக பராமரிக்கப்படாத தொட்டிகளிலிருந்த நீரை அப்பொழுதே அகற்ற வைத்தோம்.
                               பள்ளிக்குழந்தைகளுக்கு, டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு விபரங்களை தினசரி காலை நேர அசெம்பிளியில் எடுத்துரைக்க வேண்டிக்கொண்டோம்.அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யவும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டோம். 
                                  ஒருநாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தித் திரும்பினோம். டெங்கு காய்ச்சல் பற்றிய சில தகவல்கள்:
  • டெங்கு காய்ச்சலைப்பரப்பும் “ஏடிஸ்” கொசுக்கள் நல்ல தண்ணீரில்தான் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் .
  • “ஏடிஸ்” கொசுக்கள்  பகலில்தான் ஆட்களைக்கடிக்கும்.
  •  தொட்டிகளில் நீர் தேக்கி வைத்தால், அவற்றை ஆறு நாட்களுக்குள் காலி செய்துவிடவேண்டும்.
  • நீர் காலியான உடன் தொட்டிகளை நன்றாக வெயிலில் காயவிடவேண்டும்.
  • உடைந்த ஓடுகள், பழைய டயர்கள், உடைந்த சிரட்டை(தேங்காய் ஓடு), காலி டப்பாக்கள், உரல்கள் போன்றவற்றில் சிறிது நீர் தேங்கினாலும் போதும். அதில் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் தளங்களாகிவிடும்.
  • நம் வீட்டிலிருக்கும் குளிர்சாதனப்பெட்டியின் பின்புறமுள்ள நீர்தேங்கும் அமைப்பிலும், ஏ.சி மிஷின்களின் பெட்டிகளிலும் சிறிது நீர் தேங்கினாலும் அவையும் கொசுக்களின் கூடாரங்களாகிவிடும்.                  
                             இன்றைய பணி இனிதாய் மனநிறைவுடன் முடிந்தது. பொதுமக்கள் ஒத்துழைப்புமிருந்தால், விரைவில் கொடிய நோய்களை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்பது மட்டும் உண்மை.                                             
Follow FOODNELLAI on Twitter

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் பல...

டெங்கு காய்ச்சல் பற்றிய தகவல்களுக்கு நன்றி...

Unknown said...

pani sirakka vazhthukkal

MANO நாஞ்சில் மனோ said...

சிறப்பான மக்கள் பணி, தொடரட்டும் ஆபீசர் வாழ்த்துக்கள்...

உணவு உலகம் said...

நன்றி நண்பர்களே.

Unknown said...

ஒழிப்போம் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை .

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பணி! பாராட்டுக்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் சார்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.