பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வரமென்பேன். ஆம், அப்படித்தான் எங்கள் நட்பு நாளும் தொடர்கின்றது.
எங்களுடன் தொடக்கப்பள்ளி தொட்டே அம்பாசமுத்திரம், புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் படித்த நண்பர்களில், M.ஜவஹர் ஒருவர். பின்னர் மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக, அன்றைய நாட்களில் மிகவும் பிரபலமாயிருந்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது பூத்த நட்பூக்கள்தான் P.ஜவஹர், நல்லசிவன்,R.கணேஷ் , குமரகுரு மற்றும் ராமசுப்ரமணியன்.
வாட்சப் குழு வைத்து நட்பூ நாளும் நன்றாய் வளர்ந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. பள்ளியில் பயின்ற நாட்களில் எப்படி ஒருவரை ஒருவர் அழைப்போமோ அதே பாணியில் இன்றும் ஃபோனை எடுத்தால், என்னடா எங்க இருக்க? என்று பேசுவது நல்லசிவன் பாணி. லக்கி என்பது இவரை நாங்கள் செல்லமாய் அழைக்கும் பெயர்.
நட்பு வட்டத்திலிருக்கும் நம்ம R.கணேஷ் நாளைக்கு அமெரிக்காவிலிருந்து வராண்டா”- நல்லசிவன் பாணி தகவல் தெரிவிப்பு இது. கணேஷும், ஏன் நாம ஒரு இடத்தில் சந்திச்சா நல்லாருக்குமே என்று குருப்பில் பகிர்ந்தார். நாளும் குறிக்கப்பட்டது.
திங்களன்று விநாயகரை வழிபட்டபின், மாலையில், நானும், கணேஷும், குமரகுருவும் இங்கிருந்து அம்பாசமுத்திரம் நோக்கிப்புறப்பட்டோம்.
கல்லிடையில் இருக்கும் M.ஜவஹர் இல்லத்தில் குடும்பத்தினருடன் சிறு சந்திப்பு. ஜவஹரின் பெற்றோர் நல் ஆசி வழங்கினர். ஆற்றங்கரைக்குப் போவோமா? அந்தி சாயும் நேரத்தில் அழகான ஆற்று மணலில் அமர்ந்து அளவலாமே என்று ஜவஹர் சொன்னாலும், நல்லசிவன் அழைத்தது அம்பை நோக்கி வரச்சொல்லி.
அங்கு சென்று P.ஜவஹர் மற்றும் நல்லசிவன் ஆகியோருடன் சேர்ந்து பள்ளி நாட்களை அசை போடத்துவங்கியதும்தான், நண்பர் ராமசுப்ரமணியன் நினைவு வந்தது. செல்பேசியில் தொடர்பு கொண்டால், இன்னும் அரை மணி நேரத்தில் அம்பையிலிருப்பேன் என்று சொல்லி, சொன்னபடியே வந்தும் சேர்ந்தார்.
அப்புறமென்ன, அன்றிரவு 10.30 மணிவரை அன்று எங்களிடம் கடுமை, அன்பு, பாசம் காட்டிய ஆசிரியர்கள், நண்பர்களின் சேட்டைகள் என்று தொடர்ந்தது எங்கள் பேச்சும், சிரிப்பும். பேசியதெல்லாம் பள்ளிக்கால நினைவுகள். நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.
இடையிடையே, பள்ளி நண்பர்கள் பலரின் செல்போனிலும் தொடர்பு கொண்டு, அத்தனை பேரும் அளவளாவி அகமகிழ்ந்தோம். இடையிடையே இத்தகைய சந்திப்புகள் இன்னும் நம் இளமையை இனிக்க வைக்கத்தான் செய்கின்றன.

No comments:
Post a Comment