இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 29 January, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி .

உணவு பாதுகாப்பு ஆணையர் உரை.
                     தமிழகத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும், சென்னை பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார பயிற்சி மையத்தில் வைத்து ஐந்து நாட்கள் பணியிடை பயிற்சி முகாம். 50 அலுவலர்கள் கொண்ட இரு குழுக்களுக்கு, இந்த வாரம் 28.01.13ல் சென்னையில் பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் பட்டியல் இங்கே 
                
பூந்தமல்லி பொதுசுகாதார பயிற்சி நிலையம். 
                 வாவ், சென்று பார்த்தபின்தான் தெரிந்தது, அந்த வளாகமே இயற்கை எழில் சூழ்ந்திருந்தது. அழகிய செயற்கை நீரூற்று, நகர எல்லைக்குள் ஒரு குளு குளு சுற்றுப்புறம்,மரங்களடர்ந்த சோலைவனம், குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள்  என அமர்களமாய் இருந்தது. 

                          முதல் நாள் பயிற்சி, நமது மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் திருகுமார்ஜெயந்த்இ.ஆ.ப. அவர்களின் உரையுடன் ஆரம்பமானது.  அவர்கள் உரையில், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பல பயன்தரும் அறிவுரைகள் வழங்கினார்கள். 

அவற்றில் சில: 
 • உணவு தொழில் புரிபவர்களிடம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் சாராம்சங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுங்கள்.         
 • உணவுத்தொழில் புரிபவர்களிடம், உரிமம்/பதிவு சான்றிதழ் பெறுவதன் அவசியத்தை எடுத்துரைத்து அவற்றைப் பெற வையுங்கள்.
 • உணவுத்தொழிலில் காணப்படும் சிறு சிறு குறைகளை எடுத்துக் கூறி, அவற்றை நிவர்த்தி செய்ய வையுங்கள்.
 • சிறு தவறுகள் கண்டறியப்பட்டால், அதனை அந்த உணவு தொழில் புரிபவரே களைய அறிவுறுத்துங்கள்.
 • பெரிய அளவில், தவறென்றே தெரிந்து செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடருங்கள். உதாரணமாக, சிக்கன் கட்லட் பாக்கட்கள் மீது, "சிக்கன் கட்லட்" எனக்குறிப்பிட்டுவிட்டு, 'அசைவ  உணவு'க்கான குறியீடு அச்சடிக்காததைவிட, முட்டை அல்லது அசைவம் கலந்த உணவுப் பொருள் பாக்கட் மீது "சைவ வகை" குறியீடு அச்சிட்டு அறிந்தே தவறிழைப்பவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுங்கள்.
 • எந்த சந்தர்ப்பத்திலும், தண்டனை, அபராதம் போன்றவற்றைக்  கூறி அச்சுறுத்த வேண்டாம்.
 • தமிழகத்தில் விரைவில் உணவு உரிமம் பெறுவது கணினி மயமாக்கப்படும்.
 • தமிழகத்திலுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு விரைவில் சிம் வசதியுடன் கூடிய டேப்லட் போன்கள் (TABLET PC)வழங்கப்பட்டு, அவர்களின் பணி கணினி மயமாக்கப்படும்.
              பயிற்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக இருந்தது ஆணையர் அவர்களின் உரை. 
            பயிற்சி வகுப்புகள் , CONSUMER ASSOCIATION OF INDIA வின் CONCERT அமைப்பின் மூலம்  நடத்தப்பட்டது. CONCERT அமைப்பின் இயக்குனர் மற்றும் எனக்கு உணவு ஆய்வாளர் பயிற்சி அளித்த என் ஆசான் திரு.சந்தானராஜன் அவர்கள், மிகச்சிறப்பாக பயிற்சி நடைபெற விரிவான ஏ ற்பாடுகள் செய்திருந்தார். 

           முதல் நாள்:முதல் வகுப்பு - திரு.சுரேஷ் டோங்க்ரே,முன்னாள் FPO இயக்குநர் அவர்கள் INTRODUCTION TO FOOD PROCESSING எடுத்தார்கள். .அடுத்து ஆசான் திரு. சந்தானராஜன் அவர்கள் எடுத்த FOOD NUTRITION&FOOD SAFETY பற்றி எடுத்த வகுப்பில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, TRANSFAT மற்றும் உப்பு நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு குறித்தெல்லாம் கலகலப்பாக வகுப்பெடுத்தார்கள். 

             பிற்பகலில், முன்னாள் அரசு பகுப்பாய்வாளர் திரு. பாண்டிபெருமாள் அவர்கள் EMERGING ISSUES IN FOOD PROCESSING குறித்த உரையில், ஆர்கானிக் உணவு, நியூட்ராசுட்டிக்கலஸ்,சோயா உணவு, மரபணு மாற்றம் செய்யப்பட உணவு பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

 • மீனில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தை சாதாரண தக்காளியின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் உருவானதே ஆப்பிள் தக்காளி, அதனால்தான் ஆப்பிள் தக்காளி கீழே விழுந்தாலும் உடைவதில்லை,
 • புற்று நோயால் ஏற்படும் ஒவ்வொரு நூறு இறப்பிலும் 30  இறப்புக்கள் மோசமான உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது, 
 • மெனோபாஸ்  வயதிலிருக்கும் பெண்களுக்கு சோயா உணவு மிகத்தேவையான ஒன்று, 
 • மிக விரைவில், நானோ டெக்னாலஜி மூலம் துரித உணவிலிருந்து துன்பம் தரும் கொழுப்பு மற்றும் இனிப்பை நீக்கமுடியும் 
என்பன போன்றவை அவர் உரையில் கிடைத்த அரிய தகவல்கள்.
             அடுத்து, திரு.கிருஷ்ணன் அவர்கள் CODEX ALIMENTARIUS குறித்து விளக்கினார்கள். அத்துடன் முதல்நாள் பயிற்சி இனிதே முடிந்தது. 

                       இரண்டாம் நாள் பயிற்சியில், உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி, திரு. சந்தானராஜன் அவர்களும், ROLE OF FSOs & FSS Rules பற்றி தற்போதைய அரசு பகுப்பாய்வாளர் திரு.ஜவஹர்லால் அவர்களும்  விளக்கினார்கள்.  பிற்பகல், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர் திரு.Dr.ஸ்ரீநிவாசன் அவர்கள், LICENSING & ENFORCEMENT பற்றி எடுத்த வகுப்பு விறுவிறுப்பாய் சென்றது. மத்திய உரிமம் வழங்குவதில் உள்ள வடைமுறைகளை எடுத்து சொன்ன விதம் அனைவரையும் கவர்ந்தது.  அதில் பல நண்பர்கள் உணவு தொழில் புரிபவர்கள்  பிற உரிமம் பெற வேண்டுமா என கேள்விகள் எழுப்பினர்.  இது சம்பந்தமாக தமிழக  உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் சமீபத்தில் கடிதம் எண்.1651/2012/S-1/FSSA நாள்: 09.01.2013ல் தெளிவுரை வழங்கியுள்ளார்கள். அதைக்காண:

                           தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சங்கரநாராயண பிள்ளை அவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடர்வது குறித்து கொடுத்த பயிற்சி பயனுள்ளதாக இருந்தது.
                                                                                                                 தொடரும். . . . . . 

Follow FOODNELLAI on Twitter