நம் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழும், வரும், போகும், ஆனால் சில நிகழ்வுகள், நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும்-என்றும் பசுமையாய். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு கலர் கலர் கனாக்காலம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி, எப்போதும் சந்தோஷமாய்க் கழிந்த காலம். எனக்கும், என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தித்தந்த காந்திகிராமம் தந்த ஒரு வருட கால சுகாதார ஆய்வாளர் கல்வி பயின்ற காலம் என்றென்றும் எண்ணி எண்ணி நன்றியுடன் இன்புறும் காலம்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அடுத்து என்ன படித்தால்,வாழ்வு ஏற்றமுறும் என்று சிறந்த கல்வியைத் தேடித்தேடி ஓடிய காலத்தில், எனது சகோதரரின் நண்பர் திரு.A.C.மணி அவர்கள், காந்திகிராமத்தில் இப்படி ஒரு கல்வி இருக்கிறதென்று கோடிட்டுக்காட்டினார். அதுவரை வீட்டில் செல்லப்பிள்ளை, வீட்டிலிருந்து பள்ளி வாழ்க்கை முழுவதும் முடித்தாயிற்று. முதல்முறையாக, ஹாஸ்டல் வாழ்க்கை. எப்படியிருக்குமோ என்ற அச்சத்துடன் சென்ற எனக்கு ஆஹா இதுதான் கல்லூரி வாழ்க்கை என்றுணர்த்திய நாட்கள் அவை.
நண்பர் காளிமுத்துவுடன் நான். |
காந்திகிராமத்தில் ஒரு வருட கல்வி கற்றபின், எங்கள் ஊருக்கு அருகிலுள்ள பரமகல்யாணி கல்லூரியில் இளங்கலை பயின்றேன். அதுவும்கூட, வீட்டிலிருந்தே சென்று படித்து வந்தேன். எனினும், காந்திகிராமத்தில் வாழ்ந்த ஒரு வருட ஹாஸ்டல் வாழ்க்கை, என்றும் பசுமையே.
நான் தங்கியிருந்த ஹாஸ்டல் அறை. |
உணவருந்திய மெஸ் |
தற்போது, பரமகல்யாணி கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணைந்து, பழைய உறவுகளைப் புதுப்பித்து வந்தாலும்,இன்றளவும் மறக்காமல் காந்திகிராமத்தில் பயின்ற மாணவர்கள் இணைபிரியாது இருக்கின்றோம். அதில் ஒருவர் என் நண்பர் திரு.காளிமுத்து. என்னுடனே பயின்று, தற்போது என்னுடனே பணிபுரிந்தும் வருகிறார்.
நண்பர்கள் காளிமுத்து மற்றும் வெங்கிடசாமியுடன் நான். |
மற்றொருவர் நண்பர் திரு.வெங்கிடசாமி. தற்போது அவர் மதுரையில் பணியாற்றி வந்தாலும்,அகம் குளிர அன்பைப் பொழிபவர். ஃபோனை எடுத்தால், ”என்னடா எப்படி இருக்கே?” என்று அன்று பேசியதுபோன்றே இன்றும் பேசுபவர்.
நண்பர் நாராயணன் ம்ற்றும் காளிமுத்துவுடன் நான். |
சாத்தூரில் பணியாற்றிவரும் நண்பர் (சாத்வீக) நாராயணன், சாதிக்கத்துடிக்கும் இளவல். சத்தமில்லாமல் துறைசார்ந்த பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார். சேவை மனப்பான்மை கொண்டவர்.
நண்பர் காளிமுத்துவுடன் கலியனாண்டி. |
இவர் எங்கள் குழும மூத்த சகோதரர் திரு.கலியனாண்டி. இன்னும் ஈராண்டுகளில் பணிமுடிக்க இருக்கிறார். என்னுடன் நெல்லையில் இணைந்து பணியாற்றுகிறார்.
நண்பர் பாலசந்திரனுடன் நான். |
சங்கத்தால் வேறுபட்டாலும், சந்தோஷமாய் உள்ளத்தோடும், உரிமையோடும் உறவாடுபவர் நண்பர் பாலசந்திரன். எந்தக்கருத்தென்றாலும் எடுத்து சொல்லத்தயங்காதவர். என்றும் இதயத்தில் இடமுண்டு இவருக்கு.
1962ல் தொடங்கி, இந்த ஆண்டில் 50வது பேட்ச் சுகர்தார ஆய்வாளர்களை தன்னகத்தே செதுக்கிக்கொண்டிருக்கும் இந்த நிகர்நிலை பல்கலைக்கழகம் உருவாக்கிய என் போன்ற சுகாதார ஆய்வாளர்கள், இன்று நாடெங்கும் உள்ளாட்சித்துறை,உணவு பாதுகாப்புத்துறை,ரயில்வேத்துறை என சகலதுறைகளிலும் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர். பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை, அங்கு பணியாற்றும் ALUMNI திரு.பாண்டியராஜன் சார் மற்றும் மதுரை மாநகர் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ராஜகோபால் சார் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
வகுப்பறை |
வகுப்பறை |
இந்த ஆண்டு, காந்திகிராமத்தில், பொன்விழா ஆண்டு. கடந்த 23.12.12ல் நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது Sanitation Faculty ன் முன்னாள் மாணவர்கள் சங்கம். சென்று கலந்து கொண்டோம். இளமைக்கால நினைவுகளை இன்பமாய் அசைபோட அமைந்த நல்லதொரு சந்தர்ப்பம்.
பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி. |
நாங்கள் பயின்றபோது முதல்வராயிருந்த திரு.நாராயண்சாமி சார்(சந்தன நிற சட்டையில் கண்ணாடியுடன்). |
உணவு இடைவேளையில் எங்களின் நலம் விசாரித்த முன்னாள் முதல்வர். |
துறைக்கு ரூபாய் 50,000/- நன்கொடை |
இந்த ஆண்டின் இறுதிப்பதிவு இது. 296 ஃபாலோயர்ஸ். 70,000 ஹிட்ஸ்.நன்றி நட்புக்களே.
புத்தாண்டில், மலைக்கோட்டை பிள்ளையாருடன் சந்திக்கின்றேன்.
புத்தாண்டில், மலைக்கோட்டை பிள்ளையாருடன் சந்திக்கின்றேன்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
