இரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை. அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விடுத்திருந்தோம். என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார். நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.
முதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
முதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.
ஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும் வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம்.
தொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும்.
இதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -
இனி செய்முறை விளக்கம் பார்ப்போம்.
கலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள் மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும். |
சுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,
நிறங்கள் விரைவில் பரவாது.
நண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்:
http://foodsafetynews.wordpress.com/2010/11/24

6 comments:
உங்கள் கடமைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நெல்லைக்கு வரும் போதெல்லாம், நிறைய உணவகங்களில் சாப்பிட்டு இருக்கிறோம். இதை வாசித்த பின், யோசிக்க வைக்கிறது. இங்கு செய்வது போல, வெளிப்படையாக உணவகங்களின் பெயர்களை வெளியிட்டு, அவற்றிற்கு உள்ள rating (சுகாதாரம், பழைய பதார்த்தங்களின் தரம் முதல் கொண்டு வடிவமைக்கப்பட்ட grade அடிப்படியில் தருவது) மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் செய்கிறார்கள். அதனால், உணவகங்களும் கொஞ்சம் கவனமாக இருக்கிறார்கள். அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தி rating மாற்றி கொண்டே இருப்பார்கள். இந்த முறை, எந்த அளவுக்கு அங்கே சாத்தியப்படும் என்று தெரியவில்லை.
http://www.allfoodbusiness.com/health_inspections.php
நன்றி சித்ரா மேடம். தங்களின் தகவலின் அடிப்படையில், http://www.allfoodbusiness.com/health_inspections.php சென்று பார்த்தேன். தொடர்ந்து நடக்கும் இந்த பணி.தங்கள் கனவுகள் ஒரு நாள் மெய்படும். இந்தியாவும் இதை விட முன்னேறும்.
Well done. your service is one of the best service for the people of Nellai. Vazhga valamudan.
THANK YOU SIR
பரவா இல்லையே - விடிஞ்சா எந்திரிச்சா பறந்து கிட்டே தான் இருக்கணூமா ? எவ்வளவு கலப்ப்டங்கள் - சுகாதாரமற்ற சூழ்நிலை ..... ம்ம்ம் - பாவம் பேருந்து நிலையத்திற்கும் புகை வணடி நிலயத்திற்கும் வந்து செல்லும் மக்கள்....... நட்புடன் சீனா
Post a Comment